எவர்ட்டன் விடுத்த சவாலை முறியடித்த சிட்டி

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியும் எவர்ட்டனும் நேற்று மோதின.

இந்த ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் சிட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் லிவர்பூலைவிட சிட்டி ஐந்து புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

முனைப்புடன் விளையாடிய எவர்ட்டனைத் தோற்கடிக்க சிட்டி கடுமையாகப் போராட வேண்டி இருந்தது.

எவர்ட்டனின் விளையாட்டரங்கத்தில் விளையாடியபோதிலும் சிட்டிதான் ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டது.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் சிட்டியின் கேப்ரியல் ஜேசுஸ் தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பினார்.

ஆனால் துவண்டுவிடாமல் விளையாடிய எவர்ட்டன் அடுத்த ஒன்பது நிமிடங்களில் ஆட்டத்தைச் சமன் செய்தது.

எவர்ட்டனின் சீமஸ் கோல்மன் அனுப்பிய பந்து சிட்டியின் கோல்காப்பாளரைக் கடந்து சென்றது. கோல் கோட்டுக்கு மேலே இருந்த பந்தைத் தலையால் முட்டி ஆட்டத்தைச் சமன் செய்தார் டோமினிக் கால்வெர்ட் லெவின்.

இடைவேளையின்போது, இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன.

பிற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் தாக்குதல்களை நடத்தின. ஆனால் இறுதியில் சிட்டியின் கையோங்கியது.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் சிட்டிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை எடுத்த ரியாட் மாரேஸ் பந்தை வலைக்குள் சேர்த்தார்.

அழகாக வளைந்து சென்ற பந்து வலையைத் தீண்டியபோது தொடும் தூரத்தில் வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கை சிட்டி வீரர்களிடையே ஏற்பட்டது.

புத்துணர்வுடன் விளையாடிய சிட்டி ஆட்டம் முடிய ஏறத்தாழ ஆறு நிமிடங்கள் இருந்தபோது வெற்றியை உறுதி செய்தது.

ரஹீம் ஸ்டெர்லிங் சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்டு எவர்ட்டனின் கதையை முடித்து வைத்தார்.

“எவர்ட்டனுக்கு எதிராக அதன் விளையாட்டரங்கத்தில் விளையாடுவது சிரமமிக்கது. ஆனால் ஆட்டத்தை நாங்கள் சிறப்பான முறையில் தொடங்கி வைத்தோம். வாய்ப்புகளை உருவாக்கி கோல் போட்டோம்,” என்றார் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா.

மற்றோர் ஆட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.

தொடக்கத்திலிருந்து விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஷெஃபீல்ட் யுனைடெட்டின் கோல்காப்பாளர் டீன் ஹெண்டர்சன் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் செய்த ஒரே ஒரு பிழை காரணமாக அவரது குழு தோல்வியைத் தழுவியது.

நட்சத்திர வீரர் வைனால்டம் அனுப்பிய பந்து எளிதாகப் பிடிக்கக்கூடிய அளவில் ஹெண்டர்சனை நோக்கி வந்தபோதிலும் அதை அவர் நழுவவிட்டார்.

அவர் நழுவவிட்ட பந்து கோட்டைத் தாண்டி கோலானது.

இறுதி வரை ஷெஃபீல்ட் யுனைடெட் கோல் போடாததால் லிவர்பூல் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றது.

“நாங்கள் வெற்றி பெற்றது நியாயமானதுதான். கோல் ஏதுமின்றி ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் வெற்றிக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். அதிர்ஷ்டமும் எங்களுக்குக் கைகொடுத்தது,” என்றார் லிவர்பூல் நிர்வாகி கிளோப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!