லெஸ்டர் சிட்டி: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நியூகாசல் யுனைடெட் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் தனது சொந்த அரங்கில் லெஸ்டர் சிட்டி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பட்டியலின் மூன்றாவது இடத்திற்கு லெஸ்டர் முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நாட்டவரான ஜேமி வார்டியின் இரு கோல்களும் தற்காப்பு ஆட்டக்காரரான ரிக்கார்டோ பெரேராவின் அற்புத கோலும் லெஸ்டரின் அபார வெற்றிக்கு வித்திட்டன. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் நியூகாசல் வலையில் சொந்த கோல் விழுந்ததும் ஆட்டம் முடிவடையும் தருணத்தில் லெஸ்டரின் வில்ஃபிரெட் டிடி அடித்த கோலும் லெஸ்டரின் வெற்றியை உறுதி செய்தன.
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மத்தியத்திடல் தாக்குதல் ஆட்டக்காரர் ஜேம்ஸ் மேடிசன் லெஸ்டருக்காக இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இருந்தபோதிலும், ஆட்டத்தின் தொடக்கம் முதலே லெஸ்டர் வீரர்கள் தாக்குதலில் தீவிரம் காட்டினர். அதன் பலனாகவே லெஸ்டர் காட்டில் கோல் மழை பொழிந்தது.
லெஸ்டரின் மகத்தான வெற்றி குறித்து வார்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.
"பல விதங்களில் கோல் போட முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். குறிப்பாக, பெரேராவின் கோல் அற்புதமாக இருந்தது. இனிவரும் ஆட்டங்களில் அவர் மேன்மேலும் உயருவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது," என்றார் அவர்.
நியூகாசல் தரப்பில் கருத்துரைத்த குழுத் தலைவர் ஜமால் லஷெல்ஸ், தமது குழுவிற்கு கிடைத்த படுதோல்வி குறித்து விரக்தி அடைந்தார்.
"எமது வீரர்கள் மோசமாக விளையாடினர். இந்த படுதோல்விக்கு நாங்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். எமது குழுவிலிருந்து வீரர் ஒருவர் வெளியேற்றப்பட்டாலும் திடலில் இன்னும் 10 பேர் இருந்தோம். எங்களுக்கு எதிராக கோல்கள் விழுந்ததற்கு ஒரு வீரர் குறைந்ததைக் காரணமாக சொல்லக்கூடாது," எனப் புலம்பித் தீர்த்தார் தற்காப்பு ஆட்டக்காரரான ஜமால்.
வரும் சனிக்கிழமை இரவு நடக்கும் விறுவிறுப்பான ஆட்டத்தில், 21 புள்ளிகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலின் முதல் நிலையிலுள்ள லிவர்பூலை லெஸ்டர் எதிர்கொள்கிறது.

