தாக்குதல் ஆட்டக்காரர்களை வாங்குவதில் மேன்யூ கவனம்

தாக்குதல் ஆட்டக்காரர்களை வாங்குவதில் மேன்யூ கவனம்

1 mins read

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு, தாக்குதல் ஆட்டக்காரர்களை வாங்குவதில் கவனம் செலுத்தப்போவதாக அதன் நிர்வாகி ஒலே குணார் சோல்சியார் தெரிவித்துள்ளார்.

மாற்று ஆட்டக்காரர்களை வாங்குவதற்கு முன்னதாகவே ரொமேலு லுக்காகு, அலெக்சிஸ் சான்செஸ் ஆகிய வீரர்களை இத்தாலியின் இண்டர் மிலான் குழுவிற்கு சோல்சியார் விற்றுவிட்டார். இதனால், நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் எதிரணிகளுக்கு எதிராக கோல் போடுவதில் யுனைடெட் தத்தளித்து வருகிறது.

அதே வேளையில், லுக்காகுவும் சான்செஸும் இண்டர் மிலானில் தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடங்கிவிட்டனர். இத்தாலிய லீக்கில் இதுவரை தாம் விளையாடிய ஆறு ஆட்டங்களில் லுக்காகு மூன்று கோல்களைப் போட்டார். அதேபோல, அதே குழுவில் விளையாடும் சான்செஸின் கோல் வேட்டையும் தொடர்கிறது.

மாற்று ஆட்டக்காரர்களை வாங்குவதற்கு முன்னதாகவே முக்கிய தாக்குதல் ஆட்டக்காரர்களை விற்றது குறித்து தாம் எடுத்த முடிவை சோல்சியார் தற்காத்துப் பேசுகிறார்.

"நாங்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்ட ஆட்டக்காரர் எவராவது அமைந்திருந்தால், அவரை அப்போதே ஒப்பந்தம் செய்திருப்போம்.

"லுக்காகுவை விற்க நாங்கள் முடிவெடுத்தது சரியானதே. அது அவருக்கும் தெரியும். யுனைடெட்டிற்காக விளையாட விரும்பாதவர்களை வலுக்கட்டாயப்படுத்தி குழுவில் இருக்க வைப்பதால் என்ன பலன்?" என்று சோல்சியார் வினவினார்.

இந்நிலையில், தற்போது தாக்குதல் பிரிவில் 17 வயது வளரும் ஆட்டக்காரர் மேசன் கிரீன்வூட்டை நம்பி யுனைடெட் உள்ளது.