சரித்திரம் படைத்த சிங்கப்பூர்

சரித்திரம் படைத்த சிங்கப்பூர்

3 mins read

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதிகொண்ட ஸிம்பாப்வே அணியை டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிகொண்டு, வரலாறு படைத்துள்ளது சிங்கப்பூர் கிரிக்கெட்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகைப் போட்டிகளிலும் விளையாடத் தகுதிபெற்ற, அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) முழு உறுப்பினராக உள்ள ஓர் அணியை சிங்கப்பூர் அணி வென்றிருப்பது இதுவே முதன்முறை.

சிங்கப்பூர், நேப்பாளம், ஸிம்பாப்வே ஆகிய மூன்று அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இங்கு நடந்து வருகிறது.

ஸிம்பாப்வே-நேப்பாளம் மோதிய முதல் போட்டியில் ஸிம்பாப்வேயும் சிங்கப்பூர்-நேப்பாளம் மோதிய இரண்டாவது போட்டியில் நேப்பாளமும் வெற்றிபெற்றன.

இந்நிலையில், சிங்கப்பூர்-நேப்பாளம் அணிகள் மோதிய மூன்றாவது போட்டி இந்தியர் சங்க விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

பூவா தலையாவில் வென்ற சிங்கப்பூர் அணித் தலைவர் அம்ஜத் மஹ்பூப் முதலில் தமது அணி பந்தடிக்கும் என அறிவித்தார்.

ரோகன் ரங்கராஜனும் சுரேந்திரன் சந்திரமோகனும் இணைந்து அபாரத் தொடக்கம் தந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 62 ஓட்டங்களைக் குவித்தனர். ரோகன் 22 பந்துகளில் 39 ஓட்டங்களையும் சந்திரமோகன் 17 பந்துகளில் 23 ஓட்டங்களையும் எடுத்தனர். அடுத்து வந்த திமத்தி டேவிட் 24 பந்துகளில் இரண்டு பவுண்டரி, நான்கு சிக்சர்களுடனும் மன்பிரீத் சிங் 23 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சருடனும் ஆளுக்கு 41 ஓட்டங்களை விளாசினர்.

இறுதியில், சிங்கப்பூர் அணி 18 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைக் குவித்தது.

இலக்கை விரட்டிய ஸிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரையன் சாரி இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இருந்தாலும், சக்கப்வா (18), அணித் தலைவர் சான் வில்லியம்ஸ் (66), முட்டொம்போட்ஸி (32) ஆகியோர் அதிரடியாக விளையாடி ஓட்டம் குவிக்க, அவ்வணி வெற்றிபெறும் நிலையில் இருந்தது.

அணியின் எண்ணிக்கை 163ஆக இருந்தபோது வில்லியம்ஸ் ஆட்டமிழந்ததும் சிங்கப்பூரர் வீரர்கள் ஆட்டத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கடைசி 14 பந்துகளில் 19 ஓட்டங்களில் எடுக்க வேண்டியிருந்த நிலையில், ஸிம்பாப்வே அணி மேலும் மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால், அந்த அணி 18 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை மட்டும் எடுத்து நான்கு ஓட்டங்களில் தோற்றுப்

போனது.

போட்டிக்குப் பின் பேசிய அம்ஜத் மஹ்பூப், "தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, கடைசி பந்து வரை போராட வேண்டும் என்று வீரர்களிடம் அறிவுறுத்தினேன்.

"பதற்றமின்றி, முடிவைப் பற்றி அச்சப்படாமல் விளையாடும்படி கேட்டுக்கொண்டேன். இளம் குழுவான நாங்கள், டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தகுதிபெற்ற அணி

களுள் ஒன்றை வீழ்த்தியிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

சிங்கப்பூர் கிரிக்கெட்டிற்குப் பெருமை சேர்த்த நாள் இது என்றார் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் மஹ்மூத் கஸ்னாவி.

"அனைத்துத் தரப்பிலிருந்தும் கிடைத்துவரும் ஆதரவே இந்த வெற்றிக்குக் காரணம். இதை அடித்தளமாகக் கொண்டு, அணியை மெருகேற்ற தொடர்ந்து முயல்வோம்," என்றார் திரு கஸ்னாவி.

சிங்-கப்-பூர் அணி தனது அடுத்த போட்-டி-களில் நாளை நேப்பாளத்தையும் நாளை மறுநாள் ஸிம்பாப்வேயையும் எதிர்த்தாடவிருக்கிறது.