புதுடெல்லி: முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா லண்டன் செல்ல உள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவார். பிசிசிஐ மருத்துவக் குழு ஒன்று அவரது உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
பும்ராவுடன் தேசிய கிரிக்கெட் பயிற்சிக் கழகத்தின் தலைமை இயன் மருத்துவர் ஆஷிஷ் கவுசிக்கும் லண்டன் செல்கிறார். அங்குள்ள மூன்று சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

