முதன்முறையாக ஏழு கோல்களை விட்டுக்கொடுத்த ஸ்பர்ஸ்

முதன்முறையாக ஏழு கோல்களை விட்டுக்கொடுத்த ஸ்பர்ஸ்

2 mins read
7e378c9c-1707-4aba-8b86-edc74b9fffb3
காற்பந்தை அடிக்கக் காத்திருக்கும் ஸ்பர்ஸ் அணியின் நடுத்திடல் ஆட்டக்காரர் எரிக் லமேலா. (படம்: ஏஎஃப்பி) -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இப்பருவத்தில் அடிசறுக்கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவின் சோதனைக்காலம் சாம்பியன்ஸ் லீக்கிலும் தொடர்கிறது. ஜெர்மானியக் குழுவான பயர்ன் மியூனிக் குழுவுடன் தனது சொந்த அரங்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்பர்ஸ் 2-7 எனும் கோல் கணக்கில் படுமோசமாகத் தோல்வியுற்றது.

ஸ்பர்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தனக்கெதிராக ஏழு கோல்களை அக்குழு விழவிட்டது. மியூனிக் வீரர்களின் கால்களில் பந்து பட்டாலே கோல் எனச் சொல்லும் விதமாக, ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மட்டும் ஐந்து கோல்களை மியூனிக் புகுத்தியது. பல் பிடுங்கப்பட்ட பாம்புபோல, பதிலடி எதுவும் கொடுக்க இயலாமல் ஸ்பர்ஸ் வீரர்கள் திண்டாடினர்.

முன்னதாக, ஸ்பர்சின் பரம எதிரியான ஆர்சனலுக்காக விளையாடிய செர்ஜ் கினாப்ரி, இந்த ஆட்டத்தில் மியூனிக் தரப்பில் நான்கு கோல்களைப் போட்டார். கடந்த சாம்பியன்ஸ் லீக் பருவத்தில் இறுதிச்சுற்று வரை சென்ற ஸ்பர்ஸ், இப்போது முதல் சுற்றிலேயே ஆட்டங்கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவமானமளிக்கும் இந்த தோல்வி, வீரர்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த எவரும் அனுமதிக்கக்கூடாது என ஸ்பர்ஸ் நிர்வாகி மௌரிசியோ பொக்கெட்டினோ கருத்துரைத்தார். ஸ்பர்ஸ் வீரர்கள் மீது பழியைச் சுமத்த மறுத்த அவர், "காற்பந்து உலகில் இதுபோன்ற விபரீதமான முடிவுகள் ஏற்படுவது இயல்பு. கடந்தகால வெற்றியை எவரும் நினைவில் வைத்திருக்க மாட்டார். கடுமையாக விமர்சிக்கும் வண்ணமே இன்றைய தோல்வி பலரது மனங்களிலும் நிற்கும். இந்த நிலையையும் நாங்கள் நிச்சயமாகக் கடந்து வருவோம்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் லீக்கில் மற்றோர் ஆட்டத்தில், குரோவேஷியக் குழுவான டைனமோ ஸாக்ரெப்பை 2-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வென்றது. இந்த ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹீம் ஸ்டெர்லிங்கும் ஃபில் ஃபோடனும் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தனர்.

துருக்கியக் குழுவான கேலட்டசரேயின் சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழு வென்றது. அர்ஜெண்டினிய தாக்குதல் ஆட்டக்காரர் மௌரோ இக்கார்டி, ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார்.

ஜெர்மானியக் குழுவான பயர்ன் லிவர்குசனை தனது சொந்த அரங்கில் இத்தாலியின் யுவென்டஸ் 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இப்பருவ சாம்பியன்ஸ் லீக்கில் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது முதல் கோலைப் போட்டார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இதுவரை தாம் விளையாடியுள்ள பல்வேறு குழுக்களுக்காக 127 கோல்களை ரொனால்டோ புகுத்தியுள்ளார். மற்றோர் ஆட்டத்தில், ரஷ்யக் குழுவான லோக்கோமோட்டிவ் மாஸ்கோவை அதன் சொந்த அரங்கில் 2-0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

ரியால் மட்ரிட், கிளப் பிரஹ குழுக்கள் பொருதிய மற்றோர் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.