விசாகப்பட்டினம்: தொடக்க ஆட்டக்காரராகக் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம டித்து முத்திரை பதித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.
இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டும் விளையாட வாய்ப்பளிக்கப்படாத தமிழகத்தின் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெற்றார். அதேபோல, தொடர்ந்து சொதப்பி வந்த லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக ரோகித் தொடக்க வீரராக அறிவிக்கப்பட்டார்.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி முதலில் தமது அணி பந்தடிக்கும் என அறிவித்தார்.
இதையடுத்து, ரோகித்தும் மயங்க் அகர்வாலும் தொடக்கப் பந்தடிப்பாளர்களாகக் களமிறங்கினர். தொடக்கம் முதலே நிதானமாக ஆடத் தொடங்கிய அவர்களைப் பிரிக்க தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் கையாண்ட எந்த உத்திகளும் பலனளிக்கவில்லை.
ஓவருக்கு மூன்று ஓட்டங்கள் என்ற விகிதத்தில், விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்திய அணி உணவு இடைவேளைக்குச் சென்றது.
இடைவேளைக்குப் பின் ரோகித் சற்று விரைவாக ஓட்டங்களைச் சேர்க்கத் தொடங்கினார். 154 பந்துகளில் பத்து பவுண்டரி, நான்கு சிக்சருடன் அவர் சதத்தை எட்டினார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட, அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோகித் 115 ஓட்டங்களுடனும் மயங்க் 84 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்ற தமிழர்
இதனிடையே, தமிழக வம்சாவளியைச் சேர்ந்த 25 வயது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் செனூரன் முத்துசாமி, இந்தப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

