போராடி வென்றது லிவர்பூல்

போராடி வென்றது லிவர்பூல்

2 mins read
d3caa2c7-ee85-4a22-8d0a-b9d4cd42d3b9
பந்தை வலைக்குள் தள்ளும் லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா (இடமிருந்து 2வது). படம்: இபிஏ -

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் ஆஸ்திரிய லீக்கின் நடப்பு வெற்றியாளரான சால்ஸ்பர்க்கின் மிரட்டலைக் கண்டு கலங்காமல் போராடி 4-3 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் குழு வெற்றி பெற்றது.

லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் இந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது.

நெப்போலியிடம் தோற்ற ஏமாற்றத்தைத் துடைத்தெறிய, சால்ஸ்பர்க்கைத் தோற்கடிக்கும் முனைப்புடன் லிவர்பூல் வீரர்கள் களமிறங்கினர்.

அதன்படி தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் மளமளவென கோல்களைப் போட்டு மிக விரைவாக வலுவான முன்னிலையை எட்டினர்.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மானேயும் 25வது நிமிடத்தில் ராபர்ட்சனும் 36வது நிமிடத்தில் சாலாவும் கோல்களைப் போட்டனர்.

ஆனால் துவண்டுவிடாமல் விளையாடிய சால்ஸ்பர்க் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கோல் போட்டு, கோல் இடைவெளியைக் குறைத்தது.

இடைவேளையின்போது லிவர்பூல் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டம் லிவர்பூலுக்கு ஒரு பயங்கர கனவாக அமைந்தது.

ஆட்டத்தின் 56வது, 60வது நிமிடங்களில் சால்ஸ்பர்க் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது.

இதைக் கண்டு அரங்கில் கூடி இருந்த லிவர்பூல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உத்வேகம் அடைந்த சால்ஸ்பர்க் வீரர்கள் வெற்றிக்குக் குறிவைத்தனர்.

ஆனால் பதறாமல் விளையாடிய லிவர்பூல் வெற்றியை உறுதி செய்தது.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா தமது குழுவின் நான்காவது கோலைப் போட்டார். இந்த கோலுக்கு சால்ஸ்பர்க்கால் இறுதி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. எனவே ஆட்டத்தைக் கைப்பற்றிய லிவர்பூல் மூன்று புள்ளிகளைப் பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் பிரெஞ்சுக் குழுவான லீல்லை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி வீழ்த்தியது. ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது வில்லியன் போட்ட கோல் செல்சிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

வெலன்சியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் அயக்ஸ் வெற்றி பெற்றது. அயக்ஸின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெலன்சியா சுருண்டது.

மற்றோர் ஆட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலானும் ஸ்பெயினின் பார்சிலோனாவும் மோதின.

அதில் 2வது நிமிடத்திலேயே இன்டர் கோல் போட்டு முன்னிலை பெற்றது. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. லூவிஸ் சுவாரெஸ் போட்ட இரண்டு கோல்கள் இன்டரை மூழ்கடித்து, பார்சிலோனாவுக்கு வெற்றிதேடித் தந்தது.