விசாகப்பட்டினம்: அடுத்த சில ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க இணை நாங்களே, எங்களை அசைப்பதற்கில்லை என அடித்துக் கூறும் வகையில் இருந்தது ரோகித் சர்மா - மயங்க் அகர்வால் இணையின் ஆட்டம்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரோகித் சர்மா சதமடிக்க, இரண்டாம் நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வாலின் கை ஓங்கி இருந்தது.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 317 ஓட்டங்களைச் சேர்த்தனர். தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் இந்திய அணி வீரர்கள் இருவர் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுதான்.
இரட்டைச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 176 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் ரோகித். அடுத்து களமிறங்கிய புஜாரா (6), கோஹ்லி (20), ரகானே (15) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தபோதும் இன்னொரு முனையில் நங்கூரமாக நிலைத்து ஆடினார் மயங்க்.
டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக சதமடித்த அவர், அதை இரட்டைச் சதமாக மாற்றி, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக்கொண்டார். இவர் 215 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்களை எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
அடுத்து பந்தடிக்கத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நேற்று இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களை எடுத்திருந்தது.

