தக்க பதிலடி தந்த தென்னாப்பிரிக்கா

தக்க பதிலடி தந்த தென்னாப்பிரிக்கா

2 mins read

விசாகப்பட்டினம்: முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் என இருவர் சதமடித்ததுபோல, டீன் எல்கர், குவின்டன் டி காக் என இருவர் அடித்த சதங்களால் தென்னாப்பிரிக்க அணியும் சரிவிலிருந்து மீண்டது.

இந்தியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அத்தொடர் 1-1 எனச் சமநிலையில் முடிய, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த புதனன்று தொடங்கியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்களை எடுத்து 'டிக்ளேர்' செய்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் முடிவில் எடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாளின் தொடக்கத்திலேயே 4வது விக்கெட்டாக டெம்பா பவுமாவை (18) பறிகொடுத்தது. ஆயினும், அதன்பின் டீன் எல்கருடன் இணைந்த அணித்தலைவர் டு பிளஸ்ஸி பொறுப்புடன் ஆடி, அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த எல்கரும் டி காக்கும் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர்.

அருமையாக ஆடிய எல்கர் டெஸ்ட் போட்டிகளில் தமது 12வது சதத்தை அடித்தார். அதன்பின்னும் எல்கரின் பொறுப்பான ஆட்டம் தொடர்ந்ததால் இந்திய வீரர் மயங்க் அகர்வாலைப் போலவே, அவரும் இரட்டைச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 160 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து அவர் ஏமாற்றமளித்தார்.

சதமடித்த வேகத்தில் டி காக் (111) அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த பிலாண்டரும் (0) அஸ்வின் சுழலில் சிக்கினார். அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். மூன்றாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்களை எடுத்திருந்தது.