சிங்கப்பூர் கிரிக்கெட் அணியிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்கு ஸிம்பாப்வே அணி நேற்று முன்தினம் பழிதீர்த்துக்கொண்டது.
இவ்விரு அணிகளுடன் மூன்றாவது அணியாக நேப்பாளம் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. ஒவ்வோர் அணியும் மற்ற இரு அணிகளுடன் இருமுறை மோதின.
இதில் சிங்கப்பூர்-ஸிம்பாவே அணிகள் முதல்முறை மோதிக்கொண்டதில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மீண்டும் களத்தில் சந்தித்தன.
முதலில் பந்தடித்த சிங்கப்பூர் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சந்திரமோகன் 66 ஓட்டங்களையும் டேவிட் 47 ஓட்டங்களையும் விளாசினர்.
ஒரு கட்டத்தில் 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களை எடுத்திருந்த சிங்கப்பூர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அதன் ஓட்டக் குவிப்பு மந்தமானது.
இலக்கை விரட்டிய ஸிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் பீட்டர் மோர் இறுதி வரை களத்தில் நின்று, 60 பந்துகளில் 92 ஓட்டங்களை விளாச, அந்த அணி எட்டுப் பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது.

