லண்டன்: பிரேசிலின் 18 வயதேயான இளம் காற்பந்து ஆட்டக்காரர் கேப்ரியல் மார்ட்டினெல்லி அற்புதமான இரு கோல்களைப் போட்டதோடு, இன்னொரு கோல் அடிக்க உதவ, நேற்று அதிகாலை நடந்த யூரோப்பா லீக் காற்பந்து ஆட்டமொன்றில் ஆர்சனல் குழு 4-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தின் ஸ்டேண்டர்ட் லீக குழுவைத் தோற்கடித்தது.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தலையால் முட்டி பந்தை எதிரணி வலைக்குள் அனுப்பிய மார்ட்டினெல்லி, அடுத்த மூன்று நிமிடங்களில் தமது இரண்டாவது கோலைப் புகுத்தினார். இம்முறை எதிரணி ஆட்டக்காரர்கள் மூவர் தமக்கு முன்னால் தடுப்பரண் அமைத்து நின்றிருந்தும் கிடைத்த இடைவெளிக்குள் பந்தை லாவகமாக உதைத்து கோலடித்தார்.
அதன்பின் ஜோ வில்லாக் 22வது நிமிடத்தில் தன் பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். பிற்பாதியில் ஒரு கோலை அடித்து, ஆர்சனலின் கோல் கணக்கை நான்காக உயர்த்தினார் டேனி செபாயாஸ். ஆர்சனலின் புதுவரவான செபாயாஸ், அக்குழு சார்பில் அடித்த முதல் கோல் இதுதான்.
"மார்ட்டினெல்லியின் செயல்பாடும் புத்திக்கூர்மையும் அசர வைப்பதாக இருந்தன," என மெச்சினார் ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் தடுமாறி வரும் மேன்யூ மான்செஸ்டர் யுனைடெட் குழு, யூரோப்பா லீக்கிலும் சோபிக்கத் தவறியது. நெதர்லாந்தின் அல்க்மார் குழுவுடன் அக்குழு பொருதிய ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்தது.
தமது குழுவிற்கு ஒரு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதாக மேன்யூ நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் ஆதங்கப்பட்டார்.

