கோட்டயம்: திடலில் தொண்டூழியராகச் செயல்பட்டபோது 'ஹேமர் த்ரோ' விளையாட்டில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டு தாக்கி, பள்ளி மாணவர் ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடி வருகிறார்.
கேரளாவின் பாலாவில் மாநில அளவிலான திடல்தட விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. அப்போது, மேல்நிலை ஒன்றில் பயிலும் அபீல் ஜான்சன், 17 (படம்), என்ற மாணவர் ஈட்டி எறிதல் விளையாட்டில் அளவீட்டாளராகச் செயல்பட்டார். அப்போது, அளவைக் குறித்துவிட்டு பாதுகாப்பான பகுதிக்குத் திரும்பியபோது மூன்று கிலோ எடையுள்ள இரும்பு குண்டு இவரது நெற்றியைப் பதம்பார்த்தது.
உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அபீலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், அபீலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

