விசாகப்பட்டினம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராகக் களம் கண்ட முதல் போட்டியிலேயே இரு சதங்களை அடித்து, பெரும் புகழைத் தேடிக்கொண்டார் இந்திய ஆட்டக்காரர் ரோகித் சர்மா.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 176 ஓட்டங்களைக் குவித்த ரோகித், இரண்டாவது இன்னிங்சிலும் 127 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம், சுனில் கவாஸ்கருக்குப் பிறகு ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையையும் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார்.
அத்துடன், இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையும் இவரைச் சென்றடைந்தது. இவர் முதல் இன்னிங்சில் ஆறு, 2வது இன்னிங்சில் ஏழு என மொத்தம் 13 சிக்சர்களை விளாசினார். 1994ஆம் ஆண்டு லக்னோவில் இலங்கை அணிக்கெதிராக நடந்த போட்டியில் நவ்ஜோத் சிங் சித்து எட்டு சிக்சர்களை அடித்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
மேலும், சொந்த நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஏழு இன்னிங்ஸ்களில் இவர் அரைசதம் கடந்துள்ளார். தொடர்ந்து ஆறு முறை அரை சதம் கடந்து இவருக்கு அடுத்த நிலையில் உள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் எவர்ட்டன் வீக்ஸ்.
மூன்றாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்களை எடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணி, நேற்று நான்காம் நாளில் 46 ஓட்டங்களைச் சேர்த்து, 431 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
அதன்பின், இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் ஏமாற்றமளித்தார். முதல் இன்னிங்சில் 215 ஓட்டங்களைக் குவித்த அவர் இம்முறை ஏழு ஓட்டங்களில் வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித்துடன் இணைந்த புஜாரா முதலில் மந்தமாக ஆடியபோதும் பின்னர் வேகம் கூட்டினார். இருவரும் சேர்ந்து 169 ஓட்டங்களை எடுத்தனர். 81 ஓட்டங்களுடன் புஜாரா நடையைக் கட்ட, யாரும் எதிர்பாராத வகையில் நான்காவது வீரராகக் களம் கண்டார் ஜடேஜா. அதன்பின் இந்திய அணி அதிரடியாக ஆடத் தொடங்கியது. ஜடேஜா (40), கோஹ்லி (31*), ரகானே (27*) ஓட்டங்களை விளாச, நான்கு விக்கெட் இழப்பிற்கு 323 ஓட்டங்களை எடுத்த நிலையில் 2வது இன்னிங்சை இந்திய அணி 'டிக்ளேர்' செய்தது. 395 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் தனது 2ஆம் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ஓட்டங்களை எடுத்திருந்தது.

