மேன்சிட்டிக்கு அதிர்ச்சி; மூன்றாவது இடத்தில் ஆர்சனல்

மேன்சிட்டிக்கு அதிர்ச்சி; மூன்றாவது இடத்தில் ஆர்சனல்

2 mins read
d446134d-fbdc-4e91-8ce7-432e57aba19f
-

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) நேற்று முன்தினம் நடைபெற்ற உல்வ்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி 2-0 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தனது சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வியது மேன்சிட்டிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்தத் தோல்வியின் காரணமாக, லீக்கில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலைவிட எட்டு புள்ளிகள் குறைவாக பெற்று தொடர்ந்து இரண்டாவது நிலையில் சிட்டி உள்ளது. இப்பருவத்தில் இதுவரை எட்டு ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில், இரண்டாவது முறையாக சிட்டிக்கு தோல்வி கிட்டியது. கடந்த மாதம் நார்விச் சிட்டியிடம் 2-3 எனும் கோல் கணக்கில் சிட்டி கடைசியாக தோல்வியுற்று இருந்தது.

உல்வ்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தாக்குதல் வீரர் அடாமா ட்ராவ்ரே போட்ட இரு கோல்கள், உல்வ்சின் வெற்றியை உறுதி செய்தன. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் தனது சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலசிடம் சிட்டி தோல்வியுற்றது நினைவுகூரத்தக்கது.

சிட்டி சறுக்கி வரும் நிலையில், 30 ஆண்டுகளில் முதன்முறையாக இப்பருவம் இபிஎல் கிண்ணத்தை வெல்ல முடியும் என்ற லிவர்பூலின் நம்பிக்கை வலுத்து வருகிறது. ஆனால், இது லீக்கின் ஆரம்பகட்டம்தான் என்பதால் தொடர்ந்து வரும் ஆட்டங்களில் லிவர்பூல் அதன் முன்னணியைக் கட்டிக்காக்க வேண்டும்.

மற்றோர் இபிஎல் ஆட்டத்தில், போர்ன்மத் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் தனது சொந்த மண்ணில் ஆர்சனல் வெற்றி கண்டது. இதன்மூலம், பட்டியலின் மூன்றாவது இடத்திற்கு ஆர்சனல் முன்னேறியுள்ளது. மேன்சிட்டியைவிட ஒரு புள்ளி மட்டும் குறைவாக ஆர்சனல் பெற்றுள்ளது.

முன்னாள் செல்சி தற்காப்பு ஆட்டக்காரரான டேவிட் லூயிஸ் (படம்), போர்ன்மத் குழுவுடனான ஆட்டத்தின் ஒரே கோலை தலையால் முட்டிப் போட்டார்.

இருப்பினும், ஆட்டத்தின் பிற்பாதியில் போர்ன்மத் குழு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்ய தீவிரம் காட்டியது. அதே வேளையில், முதற்பாதியில் ஆர்சனலிடம் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் மெதுவடைந்தது.

எனினும், கோல் போடும் வாய்ப்புகளை போர்ன்மத் வீணடித்ததால், ஆர்சனலின் வெற்றி உறுதியானது.