நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் வீழ்த்தியது.
நியூகாசலின் வெற்றி கோலை ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் மேத்யூ லோங்ஸ்டாஃப் போட்டார். இவர் நியூகாசலுக்காக லீக் ஆட்டத்தில் களமிறங்கியிருப்பது இதுவே முதல்முறை. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் ஒரு குழுவில் இணைந்து அக்குழுவுக்காகக் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே கோல் போட்ட ஆக இளைய வீரர் எனும் பெருமை 19 வயது லாங்ஸ்டாஃப்பைச் சேரும்.
மத்தியத் திடல் ஆட்டக்காரராக தமது அண்ணன் ஷோனுடன் அவர் நியூகாசலுக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
முற்பாதி ஆட்டத்தில் லோங்ஸ்டாஃப் அனுப்பிய பந்து யுனைடெட்டின் கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.
ஆனால் ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் அவர் அனுப்பிய பந்து, யுனைடெட்டின் கோல்காப்பாளர் டாவிட் டி கியாவைக் கடந்து சென்று வலையைத் தொட்டது.
நியூகாசலின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்க, யுனைடெட் வீரர்களின் சொதப்பலால் அக்குழு ரசிகர்கள் தொடர்ந்து ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனர்.
இப்பருவத்தில் கடந்த எட்டு ஆட்டங்களில் யுனைடெட் ஒரே ஒரு கோல் மட்டும் போட்டுள்ளது.
"நம்மை விமர்சிப்பவர்களின் வாய்களை அடைக்க வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆட்டம் சவால்மிக்கதாக அமையும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். யுனைடெட்டுக்கு எதிராக கிடைத்த வெற்றி எங்களுக்கு திருப்புமுனையாக அமைய வேண்டும்.
"யுனைடெட்டை வீழ்த்த ஏறத்தாழ 20 ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருந்தேன்," என்றார் நியூகாசலின் நிர்வாகியும் யுனைடெட்டின் முன்னாள் வீரருமான ஸ்டீவ் புருஸ்.
பிரிமியர் லீக் பட்டியலின் 12வது இடத்திற்கு யுனைடெட் தள்ளப்பட்டுள்ளது. யுனைடெட் குழுவைவிட ஒரு புள்ளி குறைவாக பெற்றுள்ள நியூகாசல், பட்டியலின் 16வது இடத்தில் உள்ளது.

