‘உலகக் கிண்ணப் போட்டியை வெல்வதே ஒரே வழி’

தற்போதைய பிரேசில் காற்பந்துக் குழுவின் தாக்குதல், தற்காப்பு, கோல் காப்புப் பிரிவில் அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் இருந்தும்கூட, அவர்களின் தரம் முந்தைய தலைமுறை வீரர்களின் தரத்திற்கு ஒப்பானதல்ல என அக்குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் மார்க்வினோஸ் கருத்துரைத்துள்ளார். 

தாக்குதல் பிரிவில் நெய்மார், கோல்காப்பாளர் இடத்தை நிரப்பப் போட்டியிடும் தலைசிறந்த ஆட்டக்காரர்களான எடர்சன் மற்றும் அலிசன், தற்காப்பில் பலம் ஆகியவை இருந்தும் மார்க்வினோஸ் இந்தக் கருத்தை முன்வைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஒன்றே.

ஆப்பிரிக்க நாடுகளான செனகல், நைஜீரியா ஆகியவற்றுடன் நட்புமுறை ஆட்டங்களில் விளையாடுவதற்காக பிரேசில் குழு சிங்கப்பூர் வந்துள்ளது. தேசிய விளையாட்டரங்கில் செனகலை நாளையும் நைஜீரியாவை வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரேசில் எதிர்கொள்ள இருக்கிறது.

பிரேசில் குழுவில் இடம்பெற்றுள்ள 25 வயது மார்க்வினோஸ், ஜேடபுள்யூ மாரியட் சிங்கப்பூர் சவுத் பீச் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது மேற்கண்ட கருத்தைப் பதிவு செய்தார்.

“எங்களது தலைமுறை சிறந்த ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், எங்களது குழுவினர் உலகக் கிண்ணத்தை வெல்லாத காரணத்தால் நாங்கள்தான் மிகச் சிறந்த வீரர்கள் எனக் கூற முடியாது,” என அவர் உள்ளபடியாகக் கூறினார்.

பிரெஞ்சு லீக்கில் பிஎஸ்ஜி குழுவுக்காக விளையாடி வரும் மார்க்வினோஸ், அண்மைய உலகக் கிண்ணப் போட்டிகளில் ஐரோப்பா ஆதிக்கம் செலுத்தி வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். கடந்த நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் ஐரோப்பிய நாடுகளே வாகை சூடின. அதுவும், கடந்த எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு ஏழு முறை ஐரோப்பிய குழு ஒன்றே தகுதி பெற்றது.

“இப்போது ஏராளமான குழுக்கள் ஐரோப்பிய பாணியிலேயே காற்பந்து விளையாடுகின்றன. ஒருபுறம் தாக்குதலில் ஈடுபட்டாலும் மறுபுறம் கோல்களை விட்டுக்கொடுத்துவிடக்கூடது என்பதற்காக தற்காப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.

“ஐரோப்பிய பாணியைக் கடைப்பிடித்தாலும் தென்னமெரிக்க பாணியில் விளையாடும் முறையை நாங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம்,” என்றார் மார்க்வினோஸ்.

கடைசியாக 2002ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில், கத்தாரில் 2022ல் நடைபெறவிருக்கும் அடுத்த போட்டி தனக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.