‘மேன்யூவின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல’

மான்செஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என அக்குழுவின் கோல்காப்பாளர் டாவிட் ட கியா கருத்து தெரிவித்துள்ளார். யுனைடெட்டில் சேர்ந்தது முதல் இதுவே தாம் எதிர்கொள்ளும் ஆகக் கடினமான தருணம் என அவர் மனந்திறந்து பேசினார்.

கடைசியாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூகாசல் குழுவிடம்  யுனைடெட் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது. முப்பது ஆண்டுகளில் லீக் பருவம் ஒன்றில் ஆக மோசமான தொடக்கத்தை யுனைடெட் சந்தித்திருக்கிறது. தற்போது லீக் பட்டியலின் 12வது இடத்தில் அக்குழு உள்ளது.

“நியூகாசல் உடனான ஆட்டத்திலும் இப்பருவத்தின் தொடக்கம் முதல் இதுவரை எனது குழு வெளிப்படுத்தியுள்ள செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல,” என ஸ்பானிய நாட்டவரனா 28 வயது ட கியா வருத்தம் தெரிவித்தார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், “ஆட்டங்களில் போதுமான கோல் போடும் வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கவில்லை. ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கு அதிக தேவை உள்ளது. வேறு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.

“குழுவில் முக்கிய ஆட்டக்காரர்கள் சிலருக்குக் காயங்கள் இருந்தாலும் ஆட்டங்களில் ஏற்படும் தோல்விக்கு அது சாக்குப்போக்கல்ல.

“யுனைடெட்டிற்கு பெருமைக்குரிய வரலாறு உள்ளது. அதன் பெருமையைக் கட்டிக்காக்க நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இம்மாதம் 20ஆம் தேதி, லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலுடன் யுனைடெட் பொருத உள்ளது.