புனே: சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறுவது எப்படி என்பதைத் தாங்கள் அறிந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி (படம்) கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 203 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், அவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கோஹ்லி, "இந்திய ஆடுகளங்களில், சொந்த நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எளிதல்ல. இருந்தாலும், அந்தச் சிரமங்களைச் சமாளித்து, ஆட்டத்தில் வெல்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காக, மெத்தனமாகவும் இருந்துவிட மாட்டோம். ஒரே ஆட்ட வேளையில் நான்கு, ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டால் சொந்த மண் சாதகமும் பயன் இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்துள்ளோம்," என்று கோஹ்லி சொன்னார்.
இதற்கிடையே, போட்டி நடக்க உள்ள புனே நகரில் இன்னும் நான்கு, ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என ஐயம் நிலவுகிறது.

