உலகக் கிண்ணக் காற்பந்து 2022: தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர்-சவூதி மோதல்

உலகக் கிண்ணக் காற்பந்து 2022: தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர்-சவூதி மோதல்

2 mins read

புரைடா (சவூதி): இன்று பின்னிரவு 1 மணிக்கு நடக்கவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்து இரண்டாம் சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர், சவூதி அரேபியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

இதுவரை இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஒன்றில் வென்று, ஒன்றில் சமநிலை கண்ட சிங்கப்பூர் குழு நான்கு புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

உலகத் தரவரிசையில் சிங்கப்பூரைவிட 87 இடங்கள் முன்னே, அதாவது 70ஆம் இடத்தில் உள்ள சவூதி ஓர் ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளது. ஏமனுடனான அந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதால், ஒரே ஒரு புள்ளியுடன் அக்குழு நான்காமிடத்தில் உள்ளது.

இருந்தாலும், இதுவரை ஒன்பது முறை சவூதியுடன் மோதியுள்ள சிங்கப்பூர் குழு, அதில் ஒருமுறைகூட வெல்லவில்லை என்பது சவூதிக்குச் சாதகமான அம்சம். கடைசியாக மோதிய ஐந்து முறையும் ஒரு கோல்கூட போடாமல் சிங்கப்பூர் குழு, சவூதியிடம் அடிபணிந்தது.

ஆனாலும், கடந்த கால வரலாற்றைப் பற்றி கவலைப்படவில்லை என்கிறார் சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளரான ஜப்பானின் டட்சுமா யோஷிடா.

"ஆட்டத்தில் நல்ல முடிவைப் பெற அச்சப்படாமல் விளையாட வேண்டியது அவசியம்," என்றார் 45 வயதான யோஷிடா.

"எங்களால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக ஆடுவோம். தாக்குதல் பாணியைக் கையாளுவோம். அது சிரமம்தான் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆயினும், எதிரணிக்குச் சவாலாக விளங்கி, ஆட்டத்தில் வெற்றிபெற விரும்புகிறோம்," என்று அவர் சொன்னார்.

ஐந்து முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சவூதியை எதிர்கொள்வது கடுமையான சோதனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பலமிக்க ஆசிய அணிகளுள் ஒன்றாக சவூதி திகழ்கிறது. ஆட்ட நுணுக்கத்திலும் தொழில்நுட்ப ரீதியிலும் சிறந்து விளங்கியபோதும் அக்குழுவால் அதிக கோல்களை அடிக்க முடியவில்லை," என்றார் திரு யோஷிடா.

முன்னைக் காட்டிலும் இப்போது சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்ட திரு யோஷிடா, அவர்கள் நல்ல குழுவாக விளங்கி, வெற்றிகளைக் குவிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார்.

கோல்காப்பாளர் ஹசன் சன்னி, தற்காப்பில் சஃபுவான் பஹருடின், இர்ஃபான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்டங்களில் கிட்டிய முடிவுகளால் மனநிறைவு அடைந்துவிடக்கூடாது என அறிவுறுத்திய சிங்கப்பூர் குழுத் தலைவர் ஹாரிஸ் ஹருண், 28, சவூதி என்ற மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு தமது சக வீரர்களைக் கேட்டுக்கொண்டார்.