2034 உலகக் கிண்ணம்: நடத்த 5 ஆசியான் நாடுகள் முயற்சி

1 mins read

2034ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த ஆசியானைச் சேர்ந்த ஐந்து நாடுகள் விண்ணப்பம் செய்ய இருக்கின்றன. அந்த நாடுகளில் சிங்கப்பூரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்துவது தொடர்பாக ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்தை தாய்லாந்தின் சுற்றுப்பயண, விளையாட்டுத் துறை அமைச்சர் ஃபிஃபாட் ரட்சகிட்பிராகார்ன் மீண்டும் உயிர்பித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் தாய்லாந்தின் தலைமையில் விண்ணப்பம் செய்யப்படும் என்று அவர் நேற்று அறிவித்தார்.

சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம், தாய்லாந்து ஆகிய ஆசியான் நாடுகள் இத்திட்டத்தில் இடம்பெறும் என்று பேங்காங் போஸ்ட் தெரிவித்தது.

கூட்டு விண்ணப்பத்துக்கு பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற விளையாட்டுத்துறை தொடர்பான ஐந்தாவது ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தில் பச்சைக் கொடி காட்டப்பட்டது.

கூட்டத்தில் சிங்கப்பூரின் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தாய்லாந்தின் தலைமையில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் இந்த விண்ணப்பத்தில் சிங்கப்பூர் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

இதுகுறித்து தாய்லாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.