வெற்றி வாய்ப்பை வீணடித்த ஜெர்மனி

வெற்றி வாய்ப்பை வீணடித்த ஜெர்மனி

1 mins read

டோர்ட்மண்ட்: அர்ஜெண்டினாவுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஜெர்மன் குழுவில் முக்கிய ஆட்டக்காரர்கள் பலர் இடம்பெறாததால், புதுமுக வீரர்கள் நிரம்பிய அக்குழு இந்த ஆட்டத்தில் தோற்றுவிடும் என விமர்சகர்கள் கருதியிருந்தனர். ஆனால், அவர்களது வாயை அடைக்கும் அளவுக்கு இரு கோல்களைப் போட்டு ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஜெர்மனி முன்னணி வகித்தது. இருப்பினும், ஆட்டத்தின் பிற்பாதியில் தனக்கு எதிராக இரு கோல்களை விழவிட்ட அக்குழு, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.

ஜெர்மன் லீக் பயர்ன் மியூனிக் குழுவிற்காக விளையாடி வரும் செர்ஜே ஞாபிரி, அர்ஜெண்டினாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அபார ஆட்டத்திறனை வெளிப்

படுத்தினார்.

ஜெர்மனிக்காக ஒரு கோலைப் போட்ட அவர், மற்றொரு கோலைப் போடவும் உதவினார்.

அர்ஜெண்டினா தரப்பில் நட்சத்திர ஆட்டக்காரர்களான லயனல் மெஸ்ஸி, ஆங்கல் டி மரியா, செர்ஜியோ அகுவேரோ ஆகியவர்கள் குழுவில் இடம்பெறவில்லை. எனினும், அவர்களது இடத்தை நிரப்பும் வகையில் லூக்கஸ் அலாரியோ, லூக்கஸ் ஒகாம்போஸ் உள்ளிட்ட வீரர்கள் இரு கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தனர்.

ஜெர்மன் குழுவிற்காக முதன்முறையாக களமிறங்கிய நான்கு வீரர்கள், ஆட்டத்தின் பிற்பாதியில் வேகமிழந்ததாலேயே வெற்றி வாய்ப்பை ஜெர்மனி இழந்ததாகச் சொல்லப்படுகிறது.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள யூரோ 2020 தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் எஸ்டோனியாவை ஜெர்மனி எதிர்கொள்கிறது.