சவூதியிடம் சிங்கப்பூர் சரண்

புரைடா (சவூதி அரேபியா): கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் சிங்கப்பூர் குழு 3-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் வீழ்ந்தது.

ஆசிய கண்டத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை சிங்கப்பூரும் சவூதியும் மோதின. சவூதியின் புரைடா நகரில் உள்ள மன்னர் அப்துல்லா அனைத்துலக விளையாட்டரங்கில் நடந்த இந்த ஆட்டத்தில் 28வது நிமிடத்தில் கோலடித்து சவூதிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அப்துல்ஃபத்தா அசிரி.

முற்பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் சிங்கப்பூர் ஆட்டக்காரர் சஃபுவான் பஹருதீனின் தப்பாட்டம் காரணமாக சவூதிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆயினும், அப்துல்லா அல் ஹம்தான் உதைத்த பந்தை அற்புதமாகப் பாய்ந்து தடுத்தார் சிங்கப்பூர் கோல்காப்பாளர் இஸ்வான் மஹ்புட்.

முதல் பாதியில் சிங்கப்பூருக்கு ஒரு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை கோலாக மாறிவிடாமல் சவூதி தடுத்தது.

உலகத் தரவரிசையில் 70வது நிலையில் இருக்கும் சவூதி, இரண்டாம் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 61வது நிமிடத்தில் அல் ஹம்தான் சவூதியின் இரண்டாவது கோலை அடிக்க, அடுத்த ஆறாவது நிமிடத்தில் அசிரி தன் பங்கிற்கு மேலும் ஒரு கோலைப் போட்டு, சவூதியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனுடன் சேர்த்து, தரவரிசையில் 157வது இடத்திலுள்ள சிங்கப்பூர், சவூதியுடன் கடைசியாக மோதிய ஆறுமுறையும் ஒரு கோல்கூட அடிக்காமல் தோற்றுள்ளது.

பயிற்றுவிப்பாளராக டட்சுமா யோஷிடா நியமிக்கப்பட்ட பிறகு சிங்கப்பூர் குழு அடைந்த முதல் தோல்வியும் இதுதான்.

“ஆட்ட முடிவு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இருந்தாலும், நாங்கள் இறுதி வரை போராடினோம். வீரர்களின் மனப்பான்மை நன்றாக இருப்பதால் அடுத்து வரும் ஆட்டங்களில் பந்தைக் கடத்துவதில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்,” என்றார் யோஷிடா.

சவூதியும் சிங்கப்பூரும் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோல் வித்தியாசத்தில் மேம்பட்டுள்ளதால் சவூதி ‘டி’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அடுத்ததாக வரும் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய விளையாட்டரங்கில் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.