சுடச் சுடச் செய்திகள்

லுக்காகு 50வது கோல்; முதல் குழுவாக நுழைந்த பெல்ஜியம்

பிரசல்ஸ்: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட முதல் குழுவாக பெல்ஜியம் தகுதிபெற்று உள்ளது.

தகுதிச் சுற்றில் ‘ஐ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம், இதுவரை ஆடிய ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, 21 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

தலைநகர் பிரசல்ஸில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பெல்ஜிய ஆட்டக்காரர்கள் எண்மர் கோலடிக்க, அக்குழு 9-0 என்ற கோல் கணக்கில் சான் மரினோ அணியைப் புரட்டியெடுத்தது.

நட்சத்திர ஆட்டக்காரர் ரொமேலு லுக்காகு இரு கோல்களைப் போட்டார். அதில் முதல் கோல், அனைத்துலக அரங்கில் அவருக்கு 50வது கோலாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் பெல்ஜிய ஆட்டக்காரர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற ஆட்டங்களில் ரஷ்யா 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தையும் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வடஅயர்லாந்தையும் குரோவேஷியா 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியையும் வெற்றிகொண்டன.