7வது இரட்டைச் சதம், 7,000 ஓட்டம் கடந்து சாதனை

புனே: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி (படம்).

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 254 ஓட்டங்களை விளாசி, இறுதி வரை களத்தில் நின்றார். இவர் இரட்டைச் சதமடித்தது இது ஏழாவது முறை. டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சமும் இதுதான்.   

இருநூறு ஓட்டங்களைத் தொட்டபோது டெஸ்ட் போட்டிகளில் 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் இவர் எட்டினார். 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் ஹனுமா விகாரிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாச, முதல் நாளில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களை எடுத்திருந்தது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை நிதானமாகத் தொடங்கியது கோஹ்லி - ரகானே இணை. ரகானே அரை சதம் அடிக்க, சிறிது நேரத்தில் சதம் கடந்தார் கோஹ்லி. டெஸ்ட் போட்டிகளில் இவரது 26வது சதம் இது. 

ரகானே 59 ஓட்டங்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது, கேசவுக்கு 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கோஹ்லியுடன் ஜடேஜா இணைந்ததும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, தேநீர் இடைவேளைக்குப் பின் இந்திய அணி ஓட்ட விகிதம் ஓவருக்கு ஆறு ஓட்டங்களுக்கு மேல் இருந்தது. 

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் ஜடேஜா. அத்துடன், முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் கோஹ்லி. இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 601 ஓட்டங்களைக் குவித்தது.

அதன்பின் பந்தடிக்கத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, உமேஷ் பந்துவீச்சில் மார்க்ரம் (0), எல்கர் (6), முகம்மது ஷமி பந்துவீச்சில் பவுமா (8) என மூன்று விக்கெட்டுகளை இழந்து, இரண்டாம் நாள் முடிவில் 36 ஓட்டங்களை எடுத்திருந்தது.