சுடச் சுடச் செய்திகள்

போர்ச்சுகலுக்காக நூறு கோல் இலக்கை நெருங்கும் ரொனால்டோ

லிஸ்பன்: போர்ச்சுகல் காற்பந்துக் குழுவுக்காக நூறு கோல் இலக்கை நெருங்குகிறார் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்), 34. 

நேற்று அதிகாலை நடைபெற்ற யூரோ தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் லக்ஸம்பர்க் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் வீழ்த்தியது.  

போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடப்பு யூரோ கிண்ண வெற்றியாளரான போர்ச்சுகலுக்காக ரொனால்டோ ஒரு கோலைப் போட்டார். போர்ச்சுகலுக்காக இது அவர் போட்ட 94வது கோலாகும்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூரோ கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான தனது இலக்கை நோக்கி படையெடுக்கிறது போர்ச்சுகல். தற்போது ‘பி’ பிரிவில் முன்னிலை வகிக்கும் உக்ரேனுக்கு அடுத்த நிலையில் போர்ச்சுகல் உள்ளது. 

நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் லித்துவானியாவை 2-0 எனும் கோல் கணக்கில் உக்ரேன் வென்றது.