தொடர்ந்து 11வது தொடரை வென்று இந்தியா சாதனை

தொடர்ந்து 11வது தொடரை வென்று இந்தியா சாதனை

2 mins read
646ff89f-a1a1-4be6-92b8-7a8af17dcd0e
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றிகொண்ட பிறகு கடந்த நான்கு நாட்களாகத் தங்களுக்குப் பேராதரவு அளித்து வந்த ரசிகர்களுக்கு நன்றிகூறும் (வலமிருந்து) இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, துணைத் தலைவர் அஜின்கிய ரகானே, ரோகித் சர்மா. படம்: ஏஎஃப்பி -

புனே: சொந்த மண்ணில் தொடர்ந்து 11வது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

2013 முதல் சொந்த மண்ணில் ஆடிய 32 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 25 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்த இந்திய அணி, தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது. நான்காம் நாளிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 108 ஓட்டங்களும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 254 ஓட்டங்களும் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 601 ஓட்டங்களைக் குவித்தது.

அடுத்து பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 326 ஓட்டங்கள் பின்தங்கிய அந்த அணி 'ஃபாலோ ஆன்' பெற்றது.

கடந்த 11 ஆண்டுகளில் அந்த அணி முதன்முறையாக 'ஃபாலோ ஆன்' பெற்றது இதுவே முதன்முறை.

இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி பந்தடிக்கத் திணறியது. தொடக்க வீரர் மார்க்ரம் முதல் இன்னிங்சைப் போலவே 2வது இன்னிங்சிலும் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

129 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணிக்கு முதல் இன்னிங்சைப் போலவே நம்பிக்கை அளித்தது மகராஜ்-பிலாண்டர் இணை. 8வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 56 ஓட்டங்களை எடுத்தனர். இருப்பினும், எட்டுப் பந்துகளில் எஞ்சியிருந்த மூன்று விக்கெட்டுகளையும் இழந்து, தென் ஆப்பிரிக்க அணி 189 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றுப்போனது.

ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்ற கோஹ்லி, "விக்கெட் காப்பாளர் சாஹாவின் செயல்பாடு மிகவும் அருமை. அதேபோல, அஸ்வினின் மறுவருகையும் அற்புதமாக அமைந்துவிட்டது. அடுத்த போட்டியிலும் வெல்ல முற்படுவோம்," என்றார்.

இப்போட்டியில் ஆறு விக்கெட் வீழ்த்தியதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் 23வது இடத்திற்கு அஸ்வின் (356 விக்கெட்) முன்னேறினார்.

மூன்றாவது, கடைசி டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.