யூரோ கிண்ணம்: இறுதிச் சுற்றுக்கு இத்தாலி தகுதி

யூரோ கிண்ணம்: இறுதிச் சுற்றுக்கு இத்தாலி தகுதி

1 mins read

ரோம்: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது.

தலைநகர் ரோமில் இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் கிரேக்க அணியைத் தோற்கடித்தது.

முற்பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தபோதும் பிற்பாதியில் கிட்டிய பெனால்டி வாய்ப்பு மூலம் கோலடித்து இத்தாலிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ஜோர்ஜினோ. ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்தபோது பெர்னார்டெஸ்கி அடித்த கோல் மூலம் இத்தாலியின் வெற்றி உறுதியானது.

இதுவரை ஆடிய ஏழு ஆட்டங்களிலும் வென்று 21 புள்ளிகளுடன் 'ஜே' பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலி, இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது. ஐந்தாமிடத்தில் உள்ள கிரேக்கத்தின் யூரோ கனவு கலைந்தது.

இதற்கிடையே, ஸ்பெயின்-நார்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இடைநிறுத்தத்திற்காக ஆட்டத்தின் இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, ஸ்பெயினின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தினார் நார்வே தாக்குதல் ஆட்டக்காரர் ஜோஷ்வா கிங். முந்தைய ஆறு ஆட்டங்களிலும் வென்ற ஸ்பெயின் 19 புள்ளிகளுடன் 'எஃப்' பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

ஸ்பெயின் அணித்தலைவர் செர்ஜியோ ராமோசுக்கு இது 168வது அனைத்துலக ஆட்டம். இதன்மூலம், அதிக அனைத்துலக ஆட்டங்களில் ஆடிய ஐரோப்பிய வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.