தோக்கியோ: ஜப்பானை உலுக்கிய ஹகிபி புயல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானில் மிக மோசமான பாதிப்பை இந்தப் புயல் ஏற்படுத்தியுள்ளது.
புயல் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் பல வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சேறு, இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்றி ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
ஃபுகுஷிமா மாநிலம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அங்கு குறைந்தது 18 பேர் மாண்டனர். தமது இரண்டு குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவர் மாண்டார். அவரது ஒரு குழந்தையும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னொரு குழந்தையைக் காணவில்லை.
மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், காணாமல் போனவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்துக்குள் வெள்ளநீர் மிக விரைவாக நெஞ்சு வரை உயர்ந்ததாக உயிர்பிழைத்தோர் நினைவுகூர்ந்தனர்.
அதனால் தப்பிக்க முடியாமல் பலர் தவித்ததாக அவர்கள் கூறினர். ஃபுகுஷிமாவில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். என்று ஜப்பான் செய்தி நிறுவனம் என்ஹெச்கே தெரிவித்தது.
கொரியாமாவில் கார் உற்பத்தி நிறுவனம் நிஸ்ஸானின் ஆலை சேதமடைந்ததாக தெரிவிக்கப் பட்டது. ஹகிபி புயல் ஏற்படுத்திய பாதிப்பு ஜப்பானின் பொருளியலை வெகுவாகப் பாதிக்கும் என்றார் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே.
"வெள்ளத்தால் அன்புக்குரியவர்கள், உடைமைகளை இழந்தோர் கூடிய விரைவில் இயல்புநிலைக்குத் திரும்ப உதவும் வகையில் ஜப்பானிய அரசாங்கம் ஆன அனைத்தையும் தொடர்ந்து செய்யும்," என்று நாடாளுமன்றக் குழுவிடம் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். துயர்துடைப்பு முகாம்கள் அனைவருக்கும் அடைக்கலம் தர வேண்டும் என்றார் அவர்.

