டோனியின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவு

டோனியின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவு

2 mins read

கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பளிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இம்மாதம் 24ஆம் தேதி அணித் தேர்வுக்குழுவிடம் பேசவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலி இம்மாதம் 23ஆம் தேதி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மறுநாள் 24ஆம் தேதி பங்ளாதேஷ் அணியுடன் மோதவிருக்கும் இந்திய அணித் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

இந்தியா செல்லவிருக்கும் பங்ளாதேஷ் அணி, அவ்வணியுடன் மூன்று டி20 போட்டிகளிலும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவிருக்கிறது.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு டோனி அனைத்துலகப் போட்டிகளில் விளையாடவில்லை. இரு வார காலம் இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்ட 38 வயதான டோனி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. அதன்பின் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டிகளுக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதனால், கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவது குறித்து முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், "வரும் 24ஆம் தேதி தேர்வுக் குழுவினரை நான் சந்திக்கவிருக்கிறேன். அப்போது, டோனியின் எதிர்காலம் குறித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிவேன். அதன்பின் எனது கருத்தைச் சொல்கிறேன்," என்று செய்தியாளர்களிடம் கங்குலி தெரிவித்தார்.

விளையாட்டாளர் ஒருவர் இப்படி நீண்டகாலம் ஓய்வில் இருக்கலாமா எனக் கேட்டதற்கு, அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில், டோனியின் விருப்பத்தையும் கேட்டறிய வேண்டும் என்றார் அவர்.

2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, அதன்பிறகு ஒருநாள், டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே, இந்திய-பாகிஸ்தான் இருதரப்புத் தொடர் குறித்து இருநாட்டுப் பிரதமர்களே முடிவெடுக்க வேண்டும் என்று கூறி, கங்குலி ஒதுங்கிக்கொண்டார்.