மான்செஸ்டர்: லிவர்பூல் காற்பந்துக் குழுவிற்கு எதிராக நாளை மறுநாள் நடக்கவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் பால் போக்பா, கோல்காப்பாளர் டாவிட் ட கியா ஆகியோர் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று யூரோ கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின்-சுவீடன் நாடுகள் மோதியதில் ட கியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆட்டத்தைத் தொடர முடியாமல் அவர் திடலைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனிடையே, மேன்யூ விளையாடிய கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்தில் போக்பாவும் விளையாட முடியாமல் போனது.
அனைத்துலக தகுதிச் சுற்று ஆட்டங்களுக்காக பிரிமியர் லீக் ஆட்டங்களுக்கு விடப்பட்ட விடுமுறைக் காலத்தில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டாலும் அவர் இன்னமும் களமிறங்க முடியாத நிலையில் இருக்கிறார்.
"ஆர்சனலுடனான ஆட்டத்திற்குப் பிறகு, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்தது அவருக்கு சில வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது.
"அது அதிக காலமாக இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் அவரால் லிவர்பூலுடனான ஆட்டத்தில் பங்குபெற முடியாது," என்றார் மேன்யூ நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்.

