40 புள்ளிகளுக்கு இந்தியா இலக்கு

ராஞ்சி: தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டபோதும் உலக டெஸ்ட் வெற்றியாளருக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த நிலையை மேலும் வலுவாக்கும் முனைப்புடன் இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரைத் தன்வசமாக்கிக்கொண்ட இந்திய அணி, இன்று தொடங்கவுள்ள 3வது, கடைசி டெஸ்ட் போட்டியையும் எளிதாக எடுத்துக்கொள்ளாது என அதன் தலைவர் விராத் கோஹ்லி கூறியிருக்கிறார்.

ஒருநாள், டி20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் போல, ஈராண்டுக்கு ஒருமுறை வெற்றியாளரை முடிவு செய்யும் வகையில் ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் என்ற வகையில், முதலிரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 80 புள்ளிகளைப் பெற்றது. 3வது போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் அவ்வணிக்கு மேலும் 40 புள்ளிகள் கிடைக்கும்.

தற்போது 200 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தரப்புக்கு 60 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்தும் இலங்கையும் இரண்டாவது இடத்தில் உள்ளன.

ராஞ்சி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கலாம் என தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டு பிளஸ்ஸி கணித்திருக்கிறார். கோஹ்லியும் அவ்வாறே நினைத்தால் இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தமட்டில், காயம் காரணமாக தொடக்கப் பந்தடிப்பாளர் எய்டன் மார்க்ரமும் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜும் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டு

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண ராணுவ வீரர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், தேசிய சாரணர் படையினர் என ஐந்தாயிரம் பேருக்கு இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது.