வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்துவிடாதீர்

வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்துவிடாதீர்

2 mins read
3bbe6a0f-50c3-479a-9776-95b43aa3dc23
லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார். படங்கள்: ஊடகம் -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஆட்டத்தில் அக்குழுவை லிவர்பூல் புரட்டிப்போடும் என ஊடகங்களின் கணிப்பை லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் தட்டிக்கழித்தார்.

இதுகுறித்து லிவர்பூல் வீரர்களிடம் அவர் கூறுகையில், "வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்துவிடாதீர்," என எச்சரித்துள்ளார். நடப்பு பருவத்தில் லிவர்பூல் இதுவரை விளையாடியுள்ள எட்டு ஆட்டங்களில் அனைத்தையும் வென்று, லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மாறாக, அதன் பரம எதிரியான யுனைடெட் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான தொடக்கம் கண்டுள்ளது. வெறும் ஒன்பது புள்ளிகளுடன் பட்டியலின் 12வது இடத்தில் அது தேங்கியுள்ளது.

கோல்காப்பாளர் டாவிட் ட கியா, மத்திய திடல் ஆட்டக்காரர் பால் போக்பா இன்றி யுனைடெட் விளையாடக்கூடும் என அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் ஒரு சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், சோல்சியார் இவ்வாறு கூறுவதன் மூலம் மனோ ரீதியிலாக லிவர்பூலுக்கு பொய்யாக நம்பிக்கையூட்ட அவர் முற்படுவதாக கிளோப் சொன்னார்.

"யுனைடெட்டின் வலிமை குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். இன்றைய ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்திறன் உடைய 11 வீரர்களை யுனைடெட் களமிறக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

"ட கியாவுக்கும் போக்பாவுக்கும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பில்லை என சோல்சியார் கூறியிருப்பது நான்கு நாட்களுக்கு முன்பு. ஆனால், இப்போது அவர்கள் களமிறங்கக்

கூடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றார் கிளோப்.

யுனைடெட்டின் பலத்தை லிவர்பூல் குறைத்து எடைபோடாது என்று கூறிய கிளோப், "யுனைடெட் சிறந்த குழுவாகும். ஆனால், இப்போது துரதிர்ஷ்டவசமான நிலையில் உள்ள அக்குழு, அந்நிலையை மற்ற கடுமையாக போராடுகிறது. எங்களை வீழ்த்துவதன் மூலம் அதற்கான பலனை அது எதிர்பார்க்கும்," என்று கருத்துரைத்தார்.

அண்மைக்காலமாக லிவர்பூல் எழுச்சி கண்டபோதிலும், ஜெர்மானிய நிர்வாகியான கிளோப்பின் தலைமைத்துவத்தின்கீழ் அக்குழு ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் யுனைடெட்டை இதுவரை வென்றதில்லை. அனைத்துப் போட்டிகளிலும் யுனைடெட்டின் சொந்த மண்ணில் அக்குழுவுடன் மோதிய லிவர்பூல், மூன்று ஆட்டங்களில் சமன் செய்ததோடு ஓர் ஆட்டத்தில் தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.

"எங்களுடன் பொருத யுனைடெட் காத்துக்கொண்டிருக்கும். இருதரப்புக்கும் வெற்றி தேவை. எந்த குழு அதிகம் போராடுகிறதோ அதுவே வெல்லும்," என்றார் கிளோப்.