ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று தொடங்கிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்தடிப்பாளர் ரோகித் சர்மா அதிரடியாக சதமடித்தார். இத்தொடரில் அவர் அடித்துள்ள மூன்றாவது சதம் இதுவாகும்.
பூவா தலையாவில் வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது.
தொடக்க பந்தடிப்பாளர் மயங்க் அகர்வால் 10 ஓட்டங்களிலும் புஜாரா ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் விராத் கோஹ்லி சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12 ஓட்டங்களிலேயே அவர் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
வெறும் 39 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை மளமளவென இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்த சூழ்நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ரோகித்தும் அஜிங்கியா ரகானேவும் கைகோத்தனர்.
அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை உணர்ந்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை பெய்யத் தொடங்கிய காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ரோகித் 117 ஓட்டங்களும் ரகானே 83 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபாடா இரு விக்கெட்டும் நோர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் முதல் இரு ஆட்டங்களை வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

