அதிர்ச்சித் தோல்வியால் முதலிடம் பறிபோனது

அதிர்ச்சித் தோல்வியால் முதலிடம் பறிபோனது

1 mins read

மட்ரிட்: இந்தப் பருவ ஸ்பானிய காற்பந்து லீக்கில் இதுநாள் வரை வெல்ல முடியாத குழுவாக விளங்கி வந்த ரியால் மட்ரிட்டின் பயணத்திற்கு ரியால் மயோர்க்கா குழு முட்டுக்கட்டை போட்டது.

'ரெலிகேஷன் ஸோன்' எனப்படும் பட்டியலின் கடைசி மூன்று குழுக்களில் ஒன்றாக இருந்து வந்த மயோர்க்காவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ரியால் தோற்று அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் விழுந்த அந்த கோலை அடித்தவர் லாகோ ஜூனியர்.

ரியாலின் பதில் கோல் முயற்சிகள் எல்லாம் வீணில் முடிந்தன. அத்துடன், அல்வாரோ ஒத்ரியோஸோலா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறியதால் கடைசி 15 நிமிடங்களில் ரியால் பத்துப் பேருடன் ஆடத் தள்ளப்பட்டது.

இந்தத் தோல்வியால் பட்டியலில் ரியாலின் முதலிடமும் பறிபோனது. எய்பாரை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா முதலிடத்திற்கு முன்னேறியது. பார்சிலோனா சார்பில் கிரீஸ்மன், மெஸ்ஸி, சுவாரெஸ் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர்.