மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் லிவர்பூலும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.
இந்த ஆட்டம் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டதன் மூலம் தொடர்ந்து 18வது வெற்றியைப் பதிவு செய்யும் வாய்ப்பை லிவர்பூல் நழுவவிட்டது.
காயம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகக் களமிறங்காமல் இருந்த லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் பெக்கர் நேற்று விளையாடினார்.
ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் லிவர்பூலுக்கு கோல் போட நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. ஆனால் சாடியோ மானே அனுப்பிய பந்தை வலைக்குள் சேர்க்கத் தவறினார் ரொபேட்டோ ஃபிர்மினோ.
ஃபிர்மினோ வலை நோக்கி அனுப்பிய பந்தை யுனைடெட்டின் கோல்காப்பாளர் டாவிட் டகியா தடுத்து நிறுத்தினார்.
இந்நிலையில், ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் யுனைடெட் கோல் போட்டு முன்னிலை பெற்றது.
ஆனால் இந்த கோல் சர்ச்சைக்குரியதாக அமைந்தது. மத்திய திடலிலிருந்து தாக்குதலை யுனைடெட் தொடங்கியபோது லிவர்பூலின் ஒரிகியை யுனைடெட் ஆட்டக்காரர் லிண்டலோஃப் தள்ளிவிட்டதாக அதிருப்திக் குரல்கள் எழுந்தன. இந்தத் தப்பாட்டம் காரணமாக நடுவர் ஆட்டத்தை நிறுத்தி லிவர்பூலுக்கு ஃப்ரீ கிக் கொடுத்திருக்க வேண்டும் என்று லிவர்பூல் தரப்பு அடித்துக் கூறியது. ஆனால் நடுவர் ஆட்டத்தைத் தொடர, யுனைடெட்டின் மார்கஸ் ரேஷ்ஃபர்ட்டிடம் சென்றது.
லிவர்பூல் கோல்காப்பாளர் அவரை நெருங்குவதற்குள் பந்தை வலைக்குள் அவர் அனுப்பினார்.
துவண்டுவிடாமல் போராடிய லிவர்பூல் அடுத்து சில நிமிடக்களில் பந்தை வலைக்குள் சேர்த்தது.
லிண்டலோஃபை உதறித் தள்ளிய மானே பந்தை வலைக்குள் அனுப்பினார். இருப்பினும், பந்து மானேயின் கையில் பட்டதாகக் காணொளிப் பதிவின் உதவி நாடப்பட்டது. காணொளிப் பதிவைப் பார்த்த நடுவர் கோல் செல்லாது என்று அறிவித்தார்.
இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் யுனைடெட்டுக்கு கோல்கள் போட வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை அது பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இந்நிலையில், லிவர்பூலுக்கு மாற்று ஆட்டக்காரராக ஏடம் லலானா களமிறக்கினார்.
அவர் வெறும் பத்து நிமிடங்களுக்கு விளையாடியபோதும் அவரது பங்களிப்பு லிவர்பூலுக்கு முக்கியமானதாக அமைந்தது.
ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் கோல் போட்ட லலானா லிவர்பூலுக்கு ஒரு புள்ளி பெற்றுத் தந்தார்.

