ஐஎஸ்எல்: வெற்றியுடன் தொடங்கிய கேரளா குழு

ஐஎஸ்எல்: வெற்றியுடன் தொடங்கிய கேரளா குழு

2 mins read

கொச்சி: ஆறாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) காற்பந்துப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் நடப்பு வெற்றியாளர் பெங்களூரு எஃப்.சி., சென்னையின் எஃப்.சி, அட்லெட்டிகோ டி கோல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கௌகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எஃப்.சி. மும்பை சிட்டி, ஹைதராபாத் எஃப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறும்.

கொச்சி நேரு விளை யாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அதைத் தொடர்ந்து, இரவில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, முன்னாள் வெற்றியாளர் அட்லெட்டிகோ டி கோல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆறாவது நிமிடத்தில் கோல்கத்தா வீரர் கார்ல் மெக்ஹக் கோல் போட்டார்.

ஜாவியர் ஹெர்னாண்டஸ் கோல் பகுதிக்குள் தூக்கியடித்த பந்தை அகஸ்டின் இனிஹஸ் தலையால் முட்டி கார்ல் மெக்ஹக் பக்கம் திருப்பினார்.

அதை மெக்ஹக் லாவகமாக வலைக்குள் சேர்த்தார். இது கோல்கத்தாவின் 100வது ஐஎஸ்எல் கோலாகும்.

கேரளாவுக்கு 30வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதை கேரளாவின் அணித் தலைவர் பார்தலோமேவ் ஒக்பேச் கோலாக்கினார்.

45வது நிமிடத்தில் பார்தலோமேவ் ஒக்பேச் மீண்டும் ஒரு கோல் போட்டு கேரளாவை முன்னி லைக்குக் கொண்டு சென்றார்.

பிற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் எவ்வளவு போராடியும் கோல் போட முடியாமல் போனது.

இறுதியில் கேரளா 2-1 எனும் கோல் கணக்கில் கோல்கத்தாவை வீழ்த்தி இந்தப் பருவத்தை வெற்றியுடன் தொடங்கியது.