ஷெஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் வீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆர்சனல் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது.
ஷெஃபீல்ட் யுனைடெட்டிடம் அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஒன்பதாவது இடத்துக்கு ஷெஃபீல்ட் முன்னேறியுள்ளது.
இந்த ஆட்டத்துக்கு முன்பு தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் ஆர்சனல் தோல்வி அடையாமல் புள்ளிகளைக் குவித்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் லிவர்பூலிடம் 3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல்தோல்வி அடைந்தது.
அதற்குப் பிறகு நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்தான் ஆர்சனல் தோற்றது.
முற்பாதி ஆட்டத்தில் கோல் போட ஆர்சனலுக்குப் பொன்னான வாய்ப்பு கிட்டியது.
ஆனால் அதை பெபே நழுவவிட்டார்.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் லிஸ் மோஸ்ஸெட் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
இதுவே ஷெஃபீல்ட்டின் வெற்றி கோலாக அமைந்தது.
அதன் பிறகு ஆர்சனல் எவ்வளவு முன்றும் அக்குழுவால் கோல் போட முடியவில்லை.
ஆர்சனலின் ஸாக்கா அனுப்பிய பந்தை மிக அருமையாக தடுத்து நிறுத்தினார் ஷெஃபீல்ட் யுனைடெட்டின் கோல்காப்பாளர் டீன் ஹெண்டர்சன்.
பிற்பாதி ஆட்டத்தில் ஆர்சனலுக்கு மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய டேனி செபாலோஸ் வலை நோக்கி அனுப்பிய பந்தை ஹெண்டர்சன் பிடித்தார்.
ஆர்சனல் தாக்குதல்கள் நடத்தியும் ஷெஃபீல்ட்டின் தற்காப்பு அரண் சிறிதும் வளைந்து கொடுக்காமல் உறுதியாக நின்றது.
ஆர்சனலால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, ஷெஃபீல்ட் யுனைடெட் மூன்று புள்ளிகளைப் பெற்றது.
தோல்வி அடைந்த ஆர்சனல் 15 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
லெஸ்டர் சிட்டி, செல்சி ஆகிய குழுக்களைவிட ஆர்சனல் இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

