சிட்டி, ஸ்பர்ஸ் கோல் வேட்டை

சிட்டி, ஸ்பர்ஸ் கோல் வேட்டை

3 mins read
c81ac2b3-cb16-4389-9334-7781860010c6
மான்செஸ்டர் சிட்டி குழுவின் ஐந்தாவது, இறுதி கோலைப் போட்ட ரஹீம் ஸ்டெர்லிங் (நடுவில்). முதல் கோலை அட்டலாண்டா போட்டாலும் ஸ்டர்லிங்கின் அதிரடி ஆட்டத்தை அக்குழுவினரால் சமாளிக்க முடியவில்லை. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவிற்கு எதிராக தனது முதல் கோலைப் போட்ட தும் இத்தாலியின் அட்டலாண்டா காற்பந்துக் குழு ரசிகர்கள் ஆனந்தக் கரகோ‌‌ஷம் எழுப்ப, சிட்டி குழுவின் ரசிகர்களோ அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

சாம்பியன்ஸ் லீக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் சிட்டி குழுவும் இத்தாலியின் அட்டலாண்டா குழுவும் மோதின.

அதுவும் சிட்டியின் சொந்த எட்டிஹாட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அட்டலாண்டாவின் ருஸ்லான் அடித்த கோல் யாரும் எதிர்பாக்காத ஒன்று. கிடைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிடாமல் கோலாக்கினார் ருஸ்லான்.

ஆனால் அந்த கோலே உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பியது போல் ஆயிற்று. முதல் பாதி முடிவதற்கு முன்னரே சிட்டி பதிலை கொடுத்தது.

அதன் நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ இரு கோல்களைப் போட்டு 2-1 என்று சிட்டிக்கு முன்னணியைப் பெற்றுதத் தந்தார். கோல் போட்டது அகுவேரோ என்றாலும் அந்த இரு கோல்களுக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் சக ஆட்டக்காரரான ரஹீம் ஸ்டெர்லிங்தான்.

இரு கோல்களுக்கு வித்திட்ட ஸ்டெர்லிங் பின்பு தாமே கோல்களைப் போட்டால் என்ன என்று நினைத்துவிட்டார் போலும். பிற்பாதி ஆட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் மூன்று கோல்களைப் போட்டு 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார் ஸ்டெர்லிங்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே சிட்டியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவராகத் தனது திறமைகளை வெளிப்படுத்து வருகிறார் ஸ்டெர்லிங்.

இந்தக் காற்பந்துப் பருவத்தின் இரண்டாவது ஹாட்ரிக் சாதனைபுரிந்த ஸ்டெர்லிங், உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

ஸ்டெர்லிங்கின் கோல்களால் சிட்டி குழு 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேலும் சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றின் 'சி' பிரிவில் இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியிருக்க, பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது சிட்டி.

பிஎஸ்ஜி கோல் மழை,

தப்பித்தது யுவென்டஸ்

இதற்கிடையே, இங்லாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் (ஸ்பர்ஸ்) காற்பந்துக் குழுவும் தன் பங்கிற்கு கோல் மழை பொழிந்தது. தனது சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேட் காற்பந்துக் குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் வீழ்த்தியது.

இதற்கு முன்னால் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவிடம் 7-2 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு தோற்றிருந்தது. அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வந்த ஸ்பர்ஸ் ஐரோப்பிய காற்பந்துக் குழுக்களுக்கான முன்னணி காற்பந்துப் போட்டியான சாம்பியன்ஸ் லீக் தனக்குரிய இடம்தான் என்று நிரூபித்துள்ளது.

மற்ற சில ஆட்டங்களும் நேற்று பின்னிரவு நடைபெற்றன. அவற்றில் பயர்ன் மியூனிக் குழு 3-2 என்ற கோல் கணக்கில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பியாக்கோஸ் குழுவை வீழ்த்தி பட்டியலில் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

சிட்டியும் ஸ்பர்ஸ் குழுவும் கோல் மழை பொழிந்ததுபோல பிரான்சின் பிஎஸ்ஜி குழுவும் ஐந்து கோல்கள் போட்டு பெல்ஜியத்தின் கிளப் பிரஹ குழுவை 5-0 என்று வீழ்த்தியது. அதில் எம்பாப்பே இரண்டாம் பாதி ஆட்டத்தில் மூன்று கோல்களைப் போட்டார்.

மற்றோர் ஆட்டத்தில் ர‌ஷ்யாவின் லோக்கோமோட்டிவ் மாஸ்கோ குழுவிடம் ஒரு கோல் வாங்கிக் கொண்ட இத்தாலியின் யுவென்டஸ் குழு பின்னர் சுதாரித்து ஆடி தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொண்டது. ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அது வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 77ஆம் நிமிடம் வரை 1-0 என்று பின்தங்கி இருந்தது யுவென்டஸ். ஆனால் அதிர்‌ஷ்ட தேவதை யுவென்டசின் பக்கமே இருந்தது. அந்தத் தேவதையின் பெயர் டிபாலா. ஆம், ஆட்டத்தின் 77ஆம் நிமிடத்தில் ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்த டிபாலாவே இரண்டு நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு கோலைப் போட்டு தமது குழுவிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழு துருக்கியின் கலாத்தாசரே குழுவை எதிர்த்து ஒரு கோல் போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.