தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தத் தொடரில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை அனைத்துலக கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இந்த டெஸ்டில் 212 ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா, கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 10வது இடத்தைப் பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக 44வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்தத் தொடரில் மொத்தம் 529 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் 115 ஓட்டங்கள் விளாசிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 4 இடங்கள் உயர்ந்து 5வது இடத்துக்கு வந்துள்ளார். புஜாரா 4வது இடத்திலும், மயங்க் அகர்வால் 18வது இடத்திலும் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைவிட 1 புள்ளி மட்டுமே பின்தங்கி இருந்த இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 10 புள்ளிகளை இழந்து 2வது இடத்தில் நீடிக்கிறார்.

