எதிரணி திடலில் சாதித்த யுனைடெட்

எதிரணி திடலில் சாதித்த யுனைடெட்

2 mins read
0e0ff708-cfef-498b-8cf0-bae21b0f80e2
பார்டிஸான் பெல்கிரேடுக்கு எதிராக கோல் போட்ட ஆண்டனி மார்சியாலை (நடுவில்) பாராட்டும் சக மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் மாட்டா, ஜெஸ்ஸி லிங்கார்ட். படம்: இபிஏ -

பெல்கிரேட்: இந்தக் காற்பந்துப் பருவத்தில் கிரிஸ்டல் பேலசிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் தோற்றபின் முதன் முதலாக மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு களமிறங்கிய ஆண்டனி மார்சியால் எதிரணி மைதானத்தில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

ேநற்று முன்தினம் பின்னிரவில் யூரோப்பா லீக் போட்டி ஒன்றில் செர்பியாவின் பார்டிஸான் பெல்கிரேட் குழுவை எதிர்கொண்ட யுனைடெட் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மார்ச் மாதத்துக்குப் பிறகு எதிரணி மைதானத்தில் வென்றதில்லை என்ற கறையைப் போக்கினார் மார்சியால். இதன் மூலம் யுனைடெட் இனி சொந்த மண்ணில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அது போட்டியின் அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறும். மான்ெசஸ்டர் யுனைடெட்டின் 19 வயது புது வரவான பிரண்டன் வில்லியம்ஸ் பார்டிஸான் பெல்கிரேட்டின் கோல் வலையை நோக்கி பந்துடன் ஓட, அவரை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற சிந்தனையில் மனம்போன போக்கில் பார்டிஸான் குழுவின் நிமன்யா மிலாட்டி தடுக்கிவிட யுனைடெட்டுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட மார்சியால், கோல் கம்பத்தின் இடக்கோடிக்கு பார்டிஸான் கோல்காப்பாளரைப் பாயவிட பந்தை வலக்கோடிக்கு அனுப்பி யுனைடெட்டுக்கு 1-0 என்ற வெற்றியைத் தேடித் தந்தார். இந்தப் போட்டி குறித்து கருத்துரைத்த யுைனடெட் நிர்வாகி சோல்சியார், "பிரண்டன் வில்லியம்ஸ்தான் ஆட்ட நாயகன். அவர் அசாத்தியத் திறனுடன் விளையாடினார். அவர் பந்துடன் ஓடிய விதம் எங்களுக்கு பெனால்டிையப் பெற்றுத் தந்தது. எங்கள் அணியில் ஓர் இடப்பக்க தற்காப்பு வீரர் உருவாகியுள்ளார்," என்று பெருமிதத்துடன் கூறினார்.

மற்றொர் ஆட்டத்தில் ஆர்சனல் குழுவுக்கு மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய நிக்கலஸ் பெப்பெ கடைசி 10 நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் ஆர்சனலுக்கு வெற்றிப் பரிசை அளித்தார். அவர் களமிறங்குமுன் ஆர்சனல் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதேபோல், வேறோர் ஆட்டத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவா குழுவை எதிர்கொண்ட இங்கிலாந்தின் உல்வ்ஸ் அணி, ஒரு கோல் விட்டுக்கொடுத்து 0-1 என்றிருந்த நிலையை இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஐந்து நிமிடங்களில் இரு கோல்கள் போட்டு 2-1 என வெற்றி பெற்றது. இதே யூரோப்பா லீக் போட்டியின் இன்னொரு ஆட்டத்தில் ஏ எஸ் ரோமாவின் வெற்றி வாய்ப்பு அநியாயமாகப் பறிக்கப்பட்டதாக காற்பந்து விமர்சகர்கள் கூறு கின்றனர். அந்த ஆட்டத்தின் இறுதி யில் பந்து தற்காப்பு ஆட்டக்காரரான ஸ்மாலிங் என்பவரின் முகத்தில் பட நடுவர் கையில் பட்டதாகக் கூறி பெனால்டி வழங்கி பொருசியா மொன்சன்கிளாட்பாக் அணி 1-1 என சமநிலை காண விட்டார்.