மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ராணுவத்தில் சேவை புரிய இருப்பதாகக் கூறி இரண்டு மாதங்கள் அவர் ஓய்வு பெற்றார்.
அதிலிருந்து தற்போது வரை அவர் இந்திய அணிக்குத் திரும்பவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் அணிக்குத் திரும்பலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
டோனிக்குப் பதிலாக ரிஷப் பன்டை மூன்று வகை கிரிக்கெட்டிலும் விக்கெட் காப்பாளராக உருவாக்க, அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் ரிஷப் பன்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறுகிறார். அதனால் டோனியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.
இந்நிலையில், பங்ளாதேஷ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பன்ட் விக்கெட் காப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணியின் அறிவிப்புக்குப்பின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் டோனியின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நாங்கள் அதிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது ரிஷப் பன்ட் மீதுதான் முழுக்கவனம்," என்று தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ரிஷப் பன்டுக்கு ஆதரவாக இருக்க தொடங்கியுள்ளோம். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்க விரும்பினோம். அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், எங்களுடைய கவனம் எல்லாம் அவர் மீதுதான் உள்ளது," என்றும் பிரசாத் கருத்துரைத்தார்.
இதனால் டோனி மீண்டும் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடுவாரா என்பது கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

