சௌத்ஹேம்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் சௌத்ஹேம்டன் குழுவை 9-0 எனும் கோல் கணக்கில் பந்தாடிய லெஸ்டர் சிட்டி, இப்போட்டியின் வரலாற்றில் பதிவாகி இருக்கும் ஆகப் பெரிய வெற்றியை சமன் செய்துள்ளது.
இதற்கு முன்பு 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இப்ஸ்விச் டவுன் குழுவை 9-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் தோற்கடித்ததே ஆகப் பெரிய வெற்றியாக இருந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கிடைத்த அபார வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு லெஸ்டர் முன்னேறியது.
ஆனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை மான்செஸ்டர் சிட்டி தோற்கடித்திருந்தால் சிட்டி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.
ஆயோஸ் பெரேஸ், ஜேமி வார்டி ஆகியோர் போட்ட ஹாட்ரிக் சௌத்ஹேம்டனைத் திக்குமுக்காட வைத்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் வேகத்தைக் குறைக்காமல் தாக்குதல் நடத்தி கோல்களைக் குவிக்குமாறு தமது ஆட்டக்காரர்களிடம் உத்தரவிட்டதாக லெஸ்டர் சிட்டியின் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ் தெரிவித்தார். இந்தத் தோல்வி சௌத்ஹேடனுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என அதன் ஆட்டக்காரர் நேதன் ரெட்மண்ட் கூறினார்.

