லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடந்த விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
இதன் மூலம் லீக் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டியைவிட ஆறு புள்ளிகள் கூடுதலாக பெற்று லிவர்பூல் முன்னிலை வகிக்கிறது.
ஆன்ஃபீல்ட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே லிவர்பூலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்பர்ஸ் தரப்பில் சோன் ஹுவெங் மின் உதைத்த பந்து லிவர்பூலின் கோல்கம்பத்தைத் தொட்டு ஹேரி கேனை நோக்கி திரும்ப, பந்தைத் தலையால் முட்டி அவர் கோலாக்கினார்.
எட்டு ஆண்டுகளில் முதன்
முறையாக ஆன்ஃபீல்டில் வெல்வதற்கான தனது கனவு பயணத்தை நோக்கி ஸ்பர்ஸ் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கனவை நனவாக்கும் விதமாக ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் பாவ்லோ கஸ்ஸானிகா, ஆட்டத்தின் முற்பாதியில் லிவர்பூல் தொடுத்த கோல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தார். இதனால் முதற்பாதி ஆட்டம் முடிந்தபோது முன்னிலையுடன் ஸ்பர்ஸ் இடைவேளைக்குச் சென்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய பிறகும் லிவர்பூல் கோல் எல்லைக்குள் சோனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. அவர் உதைத்த பந்து மீண்டும் கோல்கம்பத்தை எட்டிப் பார்த்து திரும்பி விட்டது.
அந்த தருணத்தைத் தொடர்ந்து கண்விழித்துக்கொண்ட லிவர்பூல் வீரர்கள், ஆட்டத்தை தங்கள் வசம் திரும்ப முயற்சித்தனர். அதற்குப் பலனாக லிவர்பூலுக்கு முதல் கோல் கிடைத்தது.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஜோர்டன் ஹேண்டர்சன் லிவர்பூலுக்காக முதல் கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். 2015ஆம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஆன்ஃபீல்டில் முதல் லீக் கோலை ஹேண்டர்சன் போட்டுள்ளார்.
இந்த ஆட்டத்தில் சமநிலையாவது கண்டுவிட வேண்டும் என்று எண்ணிய ஸ்பர்சுக்கு சோதனை காத்திருந்தது. லிவர்பூலின் சாடியோ மானே மீது இழைக்கப்பட்ட தப்பாட்டம் காரணமாக ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
லிவர்பூலை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்லக்கூடிய பொறுப்பை ஏற்ற முகமது சாலா, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலாக்கினார்.
பிரிமியர் லீக்கில் எதிரணி அரங்கில் விளையாடியுள்ள ஸ்பர்சுக்கு இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஒரு வெற்றிக்கூட கிடைக்கவில்லை. பட்டியலின் 11வது இடத்தில் அக்குழு தேங்கிக் கிடக்கிறது.
மேன்யூவிற்கு புதுத்தெம்பு
இதற்கிடையே, நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் நார்விச் சிட்டி குழுவை அதன் சொந்த அரங்கில் 3-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வாகை சூடியது. எதிரணி அரங்கில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மேன்யூ வென்றிருப்பது நடப்பு பருவத்தில் இதுவே முதன்முறை. இந்த வெற்றியின் மூலம் அக்குழு லீக் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு மேலேறியுள்ளது.
ஆட்டத்தின் முற்பாதியில் ஸ்காட் மேக்டோமினே, மார்கஸ் ரேஷ்ஃபர்ட் அடித்த கோல்கள் மேன்யூவிற்கு வலுவான முன்னிலையைத் தந்தன.
இந்த ஆட்டத்தில் மேன்யூவிற்கு இரு பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை கோலாக்கவிடாமல் நார்விச் கோல்காப்பாளர் திம் குருல் வெற்றிகரமாக தடுத்தார்.
ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் ஆன்டனி மார்சியால் மேன்யூவிற்காக மற்றொரு கோலைப் போட்டார். வெற்றி என்பது நார்விச்சுக்கு எட்டா கனியாகி விட்ட நிலையில், ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்களே இருந்த வேளையில் ஒனேல் ஹெர்ணான்டஸ் அக்குழுவிற்காக ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.
ஆர்சனலின் வெற்றி வாய்ப்பு பறிபோனது
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனலின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. கிறிஸ்டல் பேலஸ் குழுவுடனான ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமநிலை கண்டது.
ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களிலேயே 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் முன்னிலை வகித்தது. வெறும் 106 வினாடிகள் இடைவெளியில் கார்னர் கிக் மூலம் நிக்கலஸ் பெப்பே அனுப்பிய பந்தை டேவிட் லூயிஸ், சோக்ரட்டிஸ் ஆகியோர் வலைக்குள் புகுத்தினர்.
இதற்கிடையே, பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பை பேலஸ் கோலாக்கியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தீவிரமாக விளையாடிய பேலஸ் மற்றொரு கோலை அடித்தது. இதன் மூலம் ஆட்டம் சமநிலை கண்டது.

