டாக்கா: வேலைநிறுத்தம் தொடர்பாக பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும் இன்னும் சுமுக உறவு மீளவில்லை.
வேலைநிறுத்தச் செய்தியைத் தொடர்ந்து அந்நாட்டு நட்சத்திர வீரர் தமீம் இக்பால் விலகியது பங்ளாதேஷ் கிரிக்கெட்டில் குழப்பமான நிலையை ஏற்படுத்தியது. தற்போது அதன் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பயிற்சிக்கு வராதது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திஇருக்கிறது.
இந்நிலையில், பங்ளாதேஷ் நாளிதழான 'புரோதோம் ஆலோ' என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்த பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன், "இது இந்தியச் சுற்றுப்பயணத்தை நாசமாக்கும் சதி," என்று கூறியுள்ளார்.
அதில், "இந்தியத் தொடரில் இருந்து விலகும் தமீம் இக்பாலின் முடிவுதான் இந்தியத் தொடரை நாசமாக்கும் சதித்திட்டம் என்று கூற காரணம்," என்று சொன்னார்.
தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாட முடியாது என்று முதலில் கூறிய தமீம், வீரர்களுடனான சந்திப்புக்குப் பிறகு தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார் என்றார் நஜ்முல்.
"கடைசி நேரத்தில் வேறு யாராவது வந்து, இந்தியா செல்லமாட்டேன் என்று கூறினால் ஒன்றும் செய்ய முடியாது.
"ஷாகிப்பை அழைத்துள்ளேன். அவர் என்ன கூறுவார் என்று பார்ப்போம். மற்ற வீரர்கள் பற்றியும் தெரியவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களின்படி அவர்களும் இந்தியத் தொடருக்குச் செல்லமாட்டார்கள்," என்றார்.
"போகமாட்டோம் என்று கூறினால் எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அணி மொத்தத்தையும் மாற்ற வேண்டும். நான் அணித் தலைவருக்கு எங்கு செல்வேன்? நான் என்னதான் செய்ய முடியும், நீங்களே கூறுங்கள்" என்று புலம்பினார் அவர்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நவம்பர் 3ஆம் தேதி முதல் மூன்று 20 ஓவர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடஉள்ள பங்ளாதேஷ் அணி, திட்டமிட்டபடி இன்று இந்தியா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

