ஆன்ஃபீல்ட்: லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இன்றிரவு ஆர்சனலும் லிவர்பூலும் மல்லுக்கட்டப் போகின்றன.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு 3.30 மணிக்கு லிவர்பூலின் சொந்த மைதானமான ஆன்ஃபீல்ட்டில் இக்குழுக்கள் மோதுகின்றன.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை வீழ்த்திய நம்பிக்கையோடு ஆர்சனலை லிவர்பூல் எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று இபிஎல் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது லிவர்பூல்.
ஆனால், ஆர்சனலோ கிரிஸ்டல் பேலசிடம் வெற்றியைப் பறிகொடுத்த சோகத்தில் உள்ளது. அந்த ஆட்டத்தில் முதலில் முன்னிலை வகித்த ஆர்சனலை 2-2 என சமன் செய்தது கிரிஸ்டல் பேலஸ்.
இரு குழுக்களுக்கும் லீக் கிண்ணம் மிக முக்கியம் இல்லை என்றாலும் ஆன்ஃபீல்டில் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி.
இது தவிர குழுத் தலைவர் கிரானிட் ஸாக்காவா ஏற்பட்டுள்ள சர்ச்சையாலும் ஆர்சனல் கடும் நெருக்கடியில் உள்ளது.
ரசிகரிடம் கிரானிட் ஸாக்கா நடந்துகொண்ட முறை தவறானது என்று எமெரி கூறியுள்ள நிலையில். இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஜோ வில்லக்கிற்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
லிவர்பூலின் முக்கிய வீரர் முகம்மது சாலா, ஸ்பர்ஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. வெர்ஜில் வேன் டைக்கும் இன்னும் பூரணமாகக் குணமடையவில்லை. ஜோயல் மத்திப்பும் காயமடைந்துள்ளது லிவர்பூலுக்கு பெரும் பின்னடைவு.
இன்னோர் ஆட்டத்தில் செல்சிஉடன் மான்செஸ்டர் யுனைடெட் மோதுகிறது. இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 4.05 மணிக்கு தொடங்கும்.
இந்த ஆட்டத்தில் 19 வயது பிரான்டன் வில்லியம்ஸ், 18 வயது ஜேம்ஸ் கார்னர் என இரண்டு இளம் வீரர்களைக் களமிறக்க மேன்யூ நிர்வாகி சோல்சியார் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இப்பருவத்தின் தொடக்கத்தில் செல்சியை 4-0 என மேன்யூ துவம்சம் செய்தது குறிப்பிடத்தக்கது.

