சேவாக்: மேற்கு வங்க முதல்வராவார் கங்குலி

சேவாக்: மேற்கு வங்க முதல்வராவார் கங்குலி

2 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக கங்குலி பொறுப்பேற்றுள்ள நிலையில் அடுத்தததாக அவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராவார் என்ற தனது கணிப்பும் நிறைவேறும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றதில் இருந்து அவரைப் பற்றி பலரும் பழைய நினைவுகளைப் பகிர்ந்தபடியே உள்ளனர்.

இது தொடர்பாக சேவாக் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இனிமேல் பிசிசிஐயின் நடவடிக்கை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஏனென்றால் தற்போது கங்குலி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

"2000ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைவராக இருந்தபோது அவர் அப்படித்தான் செயல்பட்டார்.

"அத்துடன் எங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்களில் எவ்வாறு வெற்றிபெறுவது என்பது தொடர்பாக கற்றுக்கொடுத்தார். அதேபோல தற்போதும் அவர் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன். கங்குலி பிசிசிஐயின் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு அவர் 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாடியது ஞாபகத்திற்கு வந்தது.

"அந்த ஆட்டத்தின்போது நான், கங்குலி குறித்து இரண்டு விஷயங்களைக் கணித்துக் கூறினேன். அவற்றில் ஒன்று இப்போது உண்மையாகிவிட்டது. இன்னொன்று விரைவில் நடக்கும்.

"கங்குலி பிசிசிஐ தலைவராக வருவார் என்பதே என்னுடைய முதல் கணிப்பு.

"இரண்டாவது, அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக வருவார் என்பது. அந்தக் கணிப்பும் விரைவில் நிறைவேறும்," என்று சேவாக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, "முதல்தர கிரிக்கெட் வீரர்களையும் ஒப்பந்த முறையில் கொண்டு வர ஏற்பாடு செய்யஇருக்கிறோம். இது தொடர்பாக புதிய பிசிசிஐ நிதிக்குழுவிடம் பேசவுள்ளோம்," என்று கங்குலி பிடிஐ செய்தியிடம் தெரிவித்து உள்ளார்.