விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பாதுகாப்பைப் பலப்படுத்தும்படி டெல்லி போலிசாருக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தி இருக்கிறது.
டெல்லி அருண் ஜெட்லி விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 3ஆம் தேதி இந்தியா-பங்ளாதேஷ் அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டை மையமாகக் கொண்டு இயங்கும் 'அனைத்திந்திய லஷ்கர்' எனும் அமைப்பு, விராத் கோஹ்லி, பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, இடைக்காலத் தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலருக்குக் குறிவைத்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பிற்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்தக் கடிதத்தின் நகலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு அனுப்பியது.
அந்தப் பயங்கரவாத மிரட்டல் வதந்தியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆயினும், பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

