ஈராண்டு தடை: ஷாகிப் வருத்தம்

ஈராண்டு தடை: ஷாகிப் வருத்தம்

2 mins read

டாக்கா: சூதாட்டத் தரகர்கள் தம்மை அணுகியது பற்றி அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் (ஐசிசி) தகவல் தெரிவிக்காததால் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதில் முதல் ஆண்டில் அவரால் எந்த வகைப் போட்டிகளிலும் விளையாட முடியாது. இந்த ஓர் ஆண்டில் அவரது நடத்தை, ஐசிசி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டாவது ஆண்டிலும் தடையை நீட்டிப்பதா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கும் அவ்வணி வீரர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்தத் தடையால் ஷாகிப் மிகவும் மனம் உடைந்து போயுள்ளார்.

"நான் மிகவும் நேசிக்கும் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து தடை செய்யப்பட்டதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். ஐசிசியின் ஊழல் தடுப்பு ஆணையம் கிரிக்கெட்டிலிருந்து ஊழலை ஒழிக்க முழுக்க முழுக்க வீரர்களையே நம்பி இருக்கிறது. அப்படி இருக்க, நான் என் கடமையைச் சரிவர செய்யவில்லை. சூதாட்டத் தரகர்கள் என்னை அணுகியதை நான் ஐசிசியிடம் தெரிவிக்காததால் எனக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக ஏற்கிறேன்," என்று ஷாகிப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் செய்த தவற்றை இளம் வீரர்கள் செய்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஷாகிப் தவறிழைத்துவிட்டார் என்றும் இதில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டு மீண்டெழுவார் என்றும் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

இதனிடையே, பங்ளாதேஷ் டி20 அணியின் தலைவராக மஹ்முதுல்லாவும் டெஸ்ட் அணியின் தலைவராக மொமினுல் ஹக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.