கோல்கத்தா: அடுத்த மாதம் 22ஆம் தேதி கோல்கத்தாவில் இந்தியா-பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.
இந்திய அணி விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவர் சௌரவ் கங்குலி எடுத்த தீவிர முயற்சியின் பலனாக, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் தெரிவித்தது.
"டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இது ஒரு நல்ல முன்னேற்றம். டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக விளையாட வேண்டும் என்ற எங்களது வேண்டுகோளை இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஏற்றுக்கொண்டார்; பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியமும் சம்மதித்துவிட்டது," என்று கங்குலி கூறினார்.
இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 1 அல்லது 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனத் தெரிகிறது. தேநீர், இரவு உணவு இடைவேளைகள் விடப்படும்.
"இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. உலகின் மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றை எதிர்த்து, ஈடன் கார்டன் திடலில் விளையாடுவது அரியதொரு தருணமாக இருக்கும்," என்றார் பங்ளாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரஸல் டொமிங்கோ.
இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்த இந்தியர்களைக் கௌரவிக்க பிசிசிஐ விரும்புகிறது.
"மேரி கோம், பி.வி.சிந்து என ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்களை அழைத்து, கௌரவிக்க விரும்புகிறோம். இலவச நுழைவுச்சீட்டுகளை அளித்து பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கங்குலி சொன்னார்.
இதேபோன்று, ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் ஆண்டுதோறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படவேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இரவு 8.30 மணிக்குப் பிறகுதான் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அதனால் ஆட்டத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அப்படியே பனி பொழிந்தாலும் அதைச் சரிசெய்ய தகுந்த ஏற்பாடுகளுடன் இருக்கிறோம் என்றும் ஈடன் கார்டன் ஆடுகள வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ரூ.50க்கு நுழைவுச்சீட்டு
ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் 68,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். போட்டி நடக்கும் ஐந்து நாட்களிலும் ரசிகர்களால் அரங்கம் நிறைந்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் விரும்புகிறது.
ஒரு நாள் ஆட்டத்தைக் காண குறைந்தபட்ச நுழைவுச்சீட்டின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.100, ரூ.150 ஆகிய விலைகளிலும் நுழைவுச்சீட்டு கிடைக்கும். இந்தப் போட்டி மிகப் பெரும் வெற்றி பெறும் என நம்புவதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அவிஷேக் டால்மியா கூறினார்.

